சென்னை வருமானவரி சோதனையில் சிக்கிய தங்கம், பணம் சேகர்ரெட்டியுடையதா?

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் வருமான வரித்துறை உதவி கமி‌ஷனர் முருகபூபதி தலைமையிலான 8 அதிகாரிகள் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் சோதனைக்கு வந்தனர். அப்போது வீட்டில் காவலாளி நாகராஜ் மட்டும் இருந்தார்.

அதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.

சேகர் ரெட்டி வீட்டில் நேற்று காவலாளி மட்டுமே இருந்தார். இதனால் வீட்டில் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடைபெறவில்லை. இதையடுத்து காட்பாடி வீட்டில் மீண்டும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பின்னர் சேகர்ரெட்டியின் வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல் கதவுகளையும் மூடி திறக்க முடியாத வகையில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து வீட்டின் கதவுகள் பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைக்கப்பட்ட கதவில் நோட்டீசு ஒட்டினர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சேகர்ரெட்டி வீட்டில் இருந்து 11.15 மணியளவில் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வருமானவரி துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பின்னர் மீண்டும் சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.