உள்ளாட்சித் தேர்தல் நடத்த திடீர் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கான சுழற்சிமுறை இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அந்த வழக்கில் கடந்த மாதம் 28–ம் தேதியன்று விசாரணை நடைபெற்றபோதே, ‘‘தேர்தல் தேதியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துவிட்டு, மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என அறிவித்ததால், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ஆய்வு செய்யக்கூட கால அவகாசம் இல்லாத சூழல் ஏற்பட்டு விட்டது’’ என்று தெரிவித்தார்கள். அப்போதே நீதிபதி கிருபாகரன் ‘‘உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனு தாக்கலை அறிவித்தது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

புதிய அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தலை நடத்தி முடிக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து அதுவரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், “உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்களுக்கான சுழற்சி முறையிலான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை. இது, அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது.

மேலும், தமிழ்நாடு பஞ்சாயத்து (தேர்தல்) விதிகள்-1995-ஐ மீறும் வகையில் தேர்தல் அறிவிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அரசாணைகளை ரத்து செய்து, சுழற்சி முறையைப் பின்பற்றி முறையான இட ஒதுக்கீடு பிரதிநிதித்துவத்தை வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு (அக்.4) ஒத்தி வைத்தார்.

கடந்த 28–9–2016 அன்று நான் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் தருவது போல நீதிபதி கிருபாகரனின் தீர்ப்பு அமைந்துள்ளது. அவசர அவசரமாக தேர்தல் தேதியை அறிவித்தது பற்றியும், எதிர்க்கட்சிகளுக்கு போதிய அவகாசம் கொடுக்காதது பற்றியும் நீதிபதி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் இவைகளை எண்ணி பார்க்காமல், தேர்தல் தேதியை அவசர அவசரமாக அறிவித்ததால், தமிழகம் முழுவதுமுள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, வேட்புமனு தாக்கல் செய்ய அதிக சிரமம் எடுத்துள்ளார்கள்.

தேர்தல் பணிகளையும், பிரசாரங்களையும் ஆற்றுவதற்கு அவர்களுக்கு எல்லாம் மேலும் வாய்ப்பு கிடைத்தது என்ற ஆறுதலை இந்த தீர்ப்பு நிச்சயமாக தரும் என்பதில் ஐயமில்லை. உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் பொதுவாக நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற நீதிபதி கிருபாகரன் அளித்துள்ள தீர்ப்பு பெரிதும் வழிவகுக்கும் என்ற வகையில் இந்தத் தீர்ப்பினை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். ஆனாலும் அ.தி.மு.க. அரசோ, மாநிலத் தேர்தல் ஆணையமோ இந்த நல்ல தீர்ப்பை வரவேற்காமல், வழக்கம்போல் மேல் முறையீடு செய்தாலும் செய்ய கூடும். என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.