ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேசத்துரோக வழக்கில் இருந்து விடுதலை!

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இக் கருத்தரங்கில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். இந்த கூட்டத்தில் இந்தியா இறையாண்மைக்கு  எதிராக வைகோ பேசியதாக  அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வைகோவை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. கியூ பிரிவு போலீசார் குற்றங்களை நிருபிக்கவில்லை என்று கூறி சென்னை 3-வது அமர்வு நீதிபதி வைகோவை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ,”நீதிமன்ற தீர்ப்பு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது இந்த வழக்கு போடப்பட்டது. புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது” என்று தெரிவித்தார்.