காதலியின் கணவரை கொலை செய்ய விஷம் அனுப்பிய காதலன்

காதலியின் கணவரை கொலை செய்ய விஷம் அனுப்பிய காதலன் கைது.

வேலூர் அருகே, சாத்துமதுரையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 36. கடந்த மாதம், 28ல், இவருக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அதில் விஸ்கி பாட்டில் இருந்தது. இதை சதீஷ்குமார், தன் நண்பரான அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமாருடன், 36, சேர்ந்து குடித்தார். சிறிது நேரத்தில் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு, இருவரும் மயங்கி விழுந்தனர்.

இருவரும், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் நடத்திய விசாரணையில், கூரியரில் இருந்த செங்கல்பட்டு முகவரி போலி என, தெரிந்தது. பார்சலில் வந்த மதுவை ஆய்வு செய்ததில், மோனோ குரோட்போபாஸ் என்ற பூச்சி கொல்லி மருந்து அதில் கலந்திருப்பதும், மது பாட்டிலில் துளை போட்டு, ஊசி மூலம் மருந்தை செலுத்தி, அந்த துளையை மெழுகு மூலம் மறைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

செங்கல்பட்டில், தனியார் கூரியர் நிறுவன கேமராவை ஆய்வு செய்து, பார்சலை அனுப்பிய வாலிபரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட நபர், புதுச்சேரி அடுத்த கோரிமேட்டை சேர்ந்த விநாயகமூர்த்தி, 35, என்பதும், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருவதும் தெரிந்தது.

விநாயகமூர்த்திய, வேலூரில் வைத்து போலீசார் விசாரித்தனர். மது பார்சல் அனுப்பியதை, அவர் ஒப்புக் கொண்டார். இதுகுறித்து, வேலூர் தாலுகா போலீசார் கூறியதாவது: புதுச்சேரியை சேர்ந்த விநாயகமூர்த்தி, கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்தார். அப்போது, வேலூரில் நடந்த ஒரு விழாவில், விநாயகமூர்த்தி கவிதை வாசித்தார்.

விழாவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கவுதமிக்கும், விநாயகமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பின், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து விட்டனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்த சதீஷ்குமாரை, கவுதமி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த, ஆறு மாதங்களாக வாட்ஸ்ஆப், பேஸ்புக் மூலம் மீண்டும் இவர்கள் இணைந்தனர். அப்போது தன்னுடன் வந்து விடும்படி கவுதமியை, விநாயகமூர்த்தி அழைத்தார். அதற்கு கவுதமி மறுத்தார்.

இதனால் சதீஷ்குமாரை கொலை செய்து விட்டு, கவுதமியை அபகரிக்க முடிவு செய்து, அதற்கான திட்டம் வகுத்தார். இதற்காக மதுவில் விஷம் கலந்து, அதை கூரியர் பார்சலில் சதீஷ்குமாருக்கு அனுப்பினார். மது பிரியரான சதீஷ்குமார், அதை தன் நண்பருடன் சேர்ந்து குடித்து சீரியசாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். வேலூர் தாலுகா போலீசார், நேற்று விநாயகமூர்த்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.