தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்கள்: மேலும் 2 விவசாயிகள் உயிரிழப்பு

வறட்சியால் கருகி உதிரும் பயிர்களை கண்ட அதிர்ச்சியில் மேலும் 2 விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து. சிவகங்கை மாவட்டம் இளையான்குட்யை அடுத்த தெற்கு சமுத்திரத்தை சேர்ந்த பெண் விவசாயி பஞ்சவர்ணம் 4 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் வயலுக்கு சென்ற அவர் வறட்சியால் பயிர்களை கருகியதை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் காளையார் கோவிலை அடுத்த நெடுங்குழத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் 4 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் கருகியதை கண்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டையை அடுத்துள்ள சிறமேல்குடியை சேர்ந்த விவசாயி பாஞ்சாலி, குத்தகை முறையில் நெல் பயிரிட்டுள்ளார். போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்த பாஞ்சாலி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதேபோல பட்டுகோட்டையை அடுத்துள்ள நடுவிகோட்டையை சேர்ந்த விவசாயி பொன்னுசாமியும் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் வயலிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதேபோல காட்டுமன்னார் அருகேயுள்ள நாகவல்லி என்ற நிறைமாத கர்பிணி வயலுக்கு சென்றபோது கருகிய பயிர்களை பார்த்து மயங்கி விழுந்து மரணமடைந்தததாக அவரது மகள் தெரிவித்துள்ளார். திருவாரூரை அடுத்துள்ள கானூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி பயிர்கள் கருகியதை கண்ட அதிர்ச்சியில் உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகேயுள்ள ஆலக்குடியை சேர்ந்த விவசாயி முருகானந்தம் பயிர்கள் கருகியதால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொன்டுள்ளார்.

இதேபோல காங்கேயத்தை சேர்ந்த விவசாயி தங்கவேல், திருச்சி மனப்பாறையை அடுத்துள்ள மேலஈச்சம்பட்டியை சேர்ந்த விவசாயி பொன்னுசங்கர், அரியலூர் அருகேயுள்ள கடுகூர் செல்வராஜ், போலூர் அருகேயுள்ள மேல்வன்னியூரை சேர்ந்த விவசாயி நாராயணன் மற்றும் கும்பகோணம் அருகேயுள்ள கருப்பூரை சேர்ந்த விவசாயி பூமிநாதன் ஆகியோரும் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் உயிரிழந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 12 விவசாயிகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.