கலாநிதி மாறன் உள்பட ஏழு பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் (பிஎஎஸ்என்எல்) தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட ஏழு பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இது தொடர்பாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் அத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது சென்னை, தில்லி ஆகிய இடங்களில் உள்ள அவரது இல்லங்களில் பொதுத் துறை தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் மூலம் மொத்தம் 353 தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் இருந்தன. அவற்றுக்குரிய அழைப்புக் கட்டணமோ வாடகைக் கட்டணமோ செலுத்தப்படவில்லை. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1,20,87,769 அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரித்த போது, தயாநிதி மாறனின் சென்னை இல்லங்கள், தில்லி இல்லம் ஆகியவற்றில் மொத்தமாக 764 தொலைபேசி இணைப்புகள் இருந்ததும், அவற்றுக்குரிய அழைப்புக் கட்டணமோ, வாடகைக் கட்டணமோ செலுத்தாததால், பிஎஸ்என்எல் சென்னை, மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனம் (எம்டிஎன்எல்) ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.1,78,71,393 அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

சென்னையில் உள்ள தனது போட் கிளப் இல்லத்தில் பிஆர்ஏ, ஐஎஸ்டிஎன், லீஸ்ட் லைன் உள்ளிட்ட உயர் ரக தொலைத்தொடர்பு வசதிகள் அடங்கிய இணைப்புகள் சட்டவிரோதமாக “சேவை’ பிரிவின் கீழ் இருந்துள்ளது. குறிப்பாக, 2004, ஜூன் முதல் 2006 டிசம்பர் வரை சுமார் 364 தொலைபேசி எண்கள் அல்லது இணைப்புகள் தயாநிதி மாறனின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்துள்ளது. 2006, டிசம்பர் முதல் 2007 செப்டம்பர் வரை தயாநிதி மாறனின் சென்னை போட் கிளப் சாலை முதலாவது அவென்யூவில் உள்ள புதிய இல்லத்தில் சுமார் 353 இணைப்புகள் இருந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, அவரது வாய்மொழி உத்தரவின்பேரில் 10 போஸ்ட்-பெயிட் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்பது இணைப்புகள் தனியார் தொலைக்காட்சி (சன் டிவி) பயன்பாட்டில் இருந்துள்ளது. அவை “சேவை’ பிரிவின் கீழ் இருந்ததால் அவற்றுக்கு மாதக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இணைப்புகள் மூலம் குரல், காணொலி, ஒலி பரிமாற்ற உயர் தொழில்நுட்ப வசதிகள் தயாநிதி மாறனின் சகோதரர் (கலாநிதி மாறன்) நடத்தி வந்த தனியார் தொலைக்காட்சிக்காக பயன்பாட்டில் இருந்துள்ளன. இந்த இணைப்புகளுக்கான சாதனங்களை நிறுவியதற்கோ, கோபாலாபுரம் – சென்னை இல்லங்களை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் உயர் தொழில்நுட்ப ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் நிறுவியதற்கும் எவ்விதக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மேலும், சரியான ஆவணங்களோ பராமரிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக பல்வேறு நிலைகளில் சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக தயாநிதி மாறன் மீதும், அவருக்கு உதவியதாக சென்னை பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர்களாக இருந்த பிரம்மநாதன், எம்.பி.வேலுசாமி, தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கௌதமன், சன் டிவி நிறுவனத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், அந்நிறுவனத்தின் தலைமை எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி, நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 120பி (உள்நோக்கத்துடன் குற்றம்புரிதல்), 409 (நம்பிக்கை துரோகம் இழைத்தல்), 420 (மோசடி செய்தல்); ஊழல் தடுப்புச் சட்டம் 13(2) பிரிவு (அரசுப் பணியில் இருந்து கொண்டு குற்றமிழைத்தல்), 13(1)(டி) பிரிவு (பிறர் ஆதாயம் அடைவதற்காக தனது அதிகாரத்தைத் தவறாகவோ சட்டவிரோதமாக பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மீதான மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2007-இல் சிபிஐக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, விசாரணை நடத்திய சிபிஐ, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலருக்கு பரிந்துரை செய்தது. ஆனால், மத்தியில் 2011-இல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தயாநிதி மாறன் சார்ந்த திமுக அங்கம் வகித்தது. இதனால், யார் மீதும் தொலைத்தொடர்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே, பிரபல பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக வழக்குகளைத் தொடுத்தார்.

இதையடுத்து, நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து 2011-இல் ஆரம்பநிலை விசாரணையைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2013-இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி தயாநிதி மாறனின் உதவியாளர் கௌதமன், கண்ணன், ரவி ஆகியோரை சிபிஐ கைது செய்தது. தற்போது மூவரும் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏழு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தயாநிதி மாறனின் சென்னை இல்லங்கள், தில்லி இல்லம் ஆகியவற்றில் மொத்தமாக 764 தொலைபேசி இணைப்புகள் இருந்ததும், அவற்றுக்குரிய அழைப்புக் கட்டணமோ, வாடகைக் கட்டணமோ செலுத்தாததால், பிஎஸ்என்எல் சென்னை, மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனம் (எம்டிஎன்எல்) ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.1,78,71,393 அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.