பாகிஸ்தான் பெண்ணை கன்னத்தில் அடித்த காவலர்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தேசிய ஆவண பதிவு அலுவலகத்தில்  நேற்று கூட்டம் அலைமோதியது. அப்போது ஒரு செய்தி சேகரிக்க  பெண் நிருபர் ஒருவர் கேமிரா மேனுடன் வந்தார் . கேமிரா நபர் வீடியோ எடுக்க, பெண் நிருபர் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, கூட்டத்தினரை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த போலீசார் ஒருவர் கேமிராவை மறைக்கும்படி சென்றதால், அவரை ஒதுங்கி செல்லும்படி நிருபர் கூறிக்கொண்டிருந்தார்

இந்த உரையாடல் நீண்டுகொண்டே செல்ல, காவலரை விரட்டி சென்று பேட்டி எடுத்த நிருபர் ஒரு கட்டத்தில் அவரது சட்ட்டையை பிடித்து திரும்பும் படி கூறினார் இதில் கோபமடைந்த  காவலர்  நிருபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு கேமிராவில் பதிவானது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலான நிலையில், இதுபற்றி விசாரணை நடத்தும்படி உள்துறை அமைச்சர் சவுதாரி நிசார் அலி கான் உத்தரவிட்டுள்ளார்.

நடந்த சம்பவம் அனைத்தும் பதிவான வீடியோ பதிவு அவரிடம் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரசினை பெரிதானதையடுத்து அந்த காவலர் தலைமறைவாகிவிட்டார். நிருபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து பாதுகாவலரின் சீருடையை கிழித்ததாக பெண் நிருபர் மீது அலுவலக தலைமை அதிகாரி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸாரை சமூக வலைத்தளங்கள் மூலம் பலர் விமர்சித்துள்ளனர். சிலர், நிருபர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும் விமர்சித்து பதிவு செய்தனர்.