முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டங்கள் திடீரென்று கலவரமாக உருவெடுத்து, தற்போது சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில், எதற்கு எடுத்தாலும் வழக்கு போடும் டிராபிக் ராமசாமி, குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், குடியரசு தினத்தன்று சென்னை கோட்டையில் கொடி ஏற்ற உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையிட்டுள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் கொடியேற்றப் போவதால், தமிழகத்தின் ஆளுநர் சார்பாக, முதல்வர் கொடியேற்றுகிறார்.

எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். ஆளுநர் இல்லாதபட்சத்தில், தலைமை நீதிபதி கொடியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், தேவைப்பட்டால் இதுபற்றி டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்யலாம் எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, அவர் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.