வானூர் அருகே கார் மீது லாரி மோதி 3 மருத்துவ மாணவர்கள் பலி

வானூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுவை மாநிலம் கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சென்னை கொளத்தூர் பாரதிநகரை சேர்ந்த அசோக்குமார் மகன் அரவிந்த்குமார் (வயது 22), சென்னை கோட்டூரை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அனந்தராமன் மகன் அரிபிரசாத் (22), கன்னியாகுமரி மாவட்டம் தங்கம்புதூரை சேர்ந்த தங்கம் என்பவரின் மகன் தங்ககுமரன் (24) ஆகியோர் 3–ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்களுடன் வேலூர் மாவட்டம் காட்டுக்குடியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுந்தரம் மகன் பாலகிருஷ்ணனும் (21) படிக்கிறார்.

இவர்கள் 4 பேரும் ஒரு காரில் நேற்று அதிகாலை புதுவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். புதுவை – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் என்ற இடத்தில் அதிகாலை 2.30 மணியளவில் அந்த கார் சென்று கொண்டிருந்தது.

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி லாரி ஒன்று எதிரே வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது லாரி நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது. மேலும் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி லாரி நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. மின்கம்பம் இரண்டாக உடைந்து சேதமடைந்தது.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அரவிந்த்குமார், அரிபிரசாத், தங்ககுமரன் ஆகியோர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். பாலகிருஷ்ணன் மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார், சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் காருக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் கார் நொறுங்கி இருந்ததால் அவர்களை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. அப்பகுதி கிராம மக்களின் உதவியால் கடப்பாரையால் நெம்பி காரில் இருந்தவர்களை மீட்டனர்.

இறந்த 3 மாணவர்களின் உடல்களை புதுவை பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்து பற்றி மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று மதியத்துக்கு மேல் பிரேத பரிசோதனை நடைபெறும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் மகன்களின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தூக்க அசதியில் லாரியை ஓட்டிவந்து, விபத்து ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள், சென்னையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக காரில் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.