பொள்ளாச்சி அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதி விபத்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி. கோட்டாம் பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் நடராஜ் (70). பொள்ளாச்சி வெங்காய வியாபாரிகள் சங்க தலைவராக உள்ளார்.

இவர் தனது மகன் திருமுருகன் (42), மருமகள் பிரியா (35), மகள் ஜெயலட்சுமி (36), மருமகன் ஆனந்தகிருஷ்ணன் (40), மற்றும் பேர குழந்தைகள் ஸ்ரீநிதி (10), சாகுத்தியா (10), தர்‌ஷன் (8). ஆகியோருடன் கடந்த 26-ந்தேதி காரில் ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய கோவிலுக்கு சென்றார். காரை நடராஜின் மருமகன் ஆனந்த கிருஷ்ணன் ஓட்டினார்.

கோவிலுக்கு சென்ற அவர்கள் மீண்டும் நேற்று இரவு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு வந்து கொண்டு இருந்தனர். கார் இன்று அதிகாலை 4.20 மணிக்கு பொள்ளாச்சி-பழனி மெயின் ரோடு ஊஞ்ச வேலாம்பட்டி-செல்லப்பம்பாளையம் பிரிவு பகுதியில் வந்தது.

அப்போது எதிர்திசையில் ஒரு லாரியை ரோட்டோரம் நிறுத்தி விட்டு டிரைவர் தூங்கி கொண்டு இருந்தார். திடீரென ஆனந்த கிருஷ்ணன் ஓட்டி வந்த கார் ரோட்டின் வலது புறத்தில் நிறுத்தி இருந்த அந்த லாரியின் முன்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் கார் லாரிக்குள் சொருகி கொண்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நடராஜ், அவரது மகன் திருமுருகன், மகள் ஜெயலட்சுமி, மருமகன் ஆனந்தகிருஷ்ணன், பேத்தி ஸ்ரீநிதி ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

மேலும் மருமகள் பிரியா மற்றும் பேரக்குழந்தைகள் தர்‌ஷன், சாகுத்தியா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் கோமங்கலம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காருக்குள் உயிருக்கு போராடி கொண்டு இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது காரை ஓட்டி வந்த ஆனந்த கிருஷ்ணன் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து வலது புறத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது மோதி விபத்து நடந்து இருப்பது தெரியவந்தது. இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அவற்றை சரிசெய்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.