திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த புதுமாப்பிள்ளை மர்ம சாவு

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ் மந்திரி (25). இவர், மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி 16ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

இதனால், அப்பாஸ் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தார். சென்னையில் தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக கடந்த சனிக்கிழமை அப்பாஸ் மந்திரி சென்னை வந்தார். தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அப்பாஸ் மந்திரி திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

இதன்பிறகு அன்று இரவு கிண்டி மடுவின்கரை சக்கரபாணி தெருவில் வசித்து வரும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, அவரது வீட்டிலேயே தங்கியுள்ளார் அப்பாஸ் மந்திரி. அப்போது நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் அப்பாஸ் மந்திரி அவர்களுக்கு மது விருந்து அளித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று காலை 6 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு செல்ல முன்பதிவு செய்து வைத்திருந்தாராம். ஆனால் மது விருந்தின் போது நண்பர்களுடன் அப்பாஸ் மந்திரியும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை ரயில்நிலையத்துக்கு செல்ல அவரது நண்பர்கள் அப்பாஸ் மந்திரியை எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் பதறிப்போன நண்பர்கள் 108 ஆம்புன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆம்புலன்ஸ்சில் விரைந்து வந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அப்பாஸ் மந்திரி மயக்கத்தில் இருப்பதாக தெரிவித்தனர். உடனே அவரை மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அப்பாஸ் மந்திரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கிண்டி போலீசார் அப்பாஸ் மந்திரி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அதிக மது அருந்தியதால் இறந்தாரா, மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், அப்பாஸ் மந்திரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை வெளிவந்தே பிறகு அவரது மர்ம மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.