ஜியோ இலவச சேவை 2017 மார்ச் 31 வரை நீடிப்பு!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக திகழ்ந்த ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் 5 கோடி வாடிக்கையாளர்களை கடக்க 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, மூன்று மாதங்கள் முழுவதுமாக முடியாத நிலையில் 5 கோடி வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவன வரலாற்றில் இத்தகைய புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கும் ஜியோ சிம்மை 1 நிமிடத்திற்கு 1000 பேர் என்ற ரீதியில், ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் வாங்குவதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அறிமுகமான ஜியோ சிம்மை வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை அழைப்புகள் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்வு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65.93-இல் இருந்து, ரூ.66.10-ஆக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.54.71-இல் இருந்து ரூ.54.54-ஆக குறைந்துள்ளது.

இதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65.41-இல் இருந்து ரூ.65.58-ஆக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.56.24-இல் இருந்து 56.10-ஆக விலை குறைந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்பவும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்பவும், பெட்ரோல், டீசல் விலையில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐ.ஓ.சி.) அறிவித்துள்ளது.

டாக்ஸி டிரைவரின் வங்கி கணக்கில் ஒரே நாளில் ரூ. 9,806 கோடி!

பஞ்சாப் மாநிலத்தில், பிரதம மந்திரியின் ஜன்தான் கணக்கு வைத்திருந்த டாக்ஸி டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ. 9,806 கோடி சேர்ந்துள்ளது.

நாட்டில் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை பெற வங்கி வாசலிலும் ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆனாலும் மக்கள் போதிய பணம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வணிகம், வியாபாரம் என அனைத்தும் ஸ்தம்பித்து போயிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாடி வருகின்றன. மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இதற்கிடையே நாட்டில் பல்வேறு கூத்துகளும் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் பல்வீந்தர் சிங். டாக்ஸி டிரைவரான பல்வீந்தர், அங்குள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலாவில் கணக்கு வைத்திருந்தார். கடந்த நவம்பர் 4ம் தேதி பல்வீந்தர்சிங், தனது கணக்கை சோதித்து பார்த்த போது 98,05,95,12,231 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 9,806 கோடி பல்வீந்தரின் கணக்கில் இருந்தது. கடந்த நிதி ஆண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மொத்த வருவாய் இது. பஞ்சாப் மாநிலத்தில் தனிநபர் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மிகப் பெரியத் தொகையும் ஆகும்.

பல்வீந்தர்சிங்கிற்கு ஒரே ஆச்சரியமாகிப் போனது. ஆனால், அவருக்கு அதில் ஏதோ தவறு இருப்பது தெரிய வந்தது. அதனால் வங்கிக்கு சென்று ‘எனது கணக்கில் ஏராளமான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. அது என்னவென்று பாருங்கள்’ என கூறியுள்ளார். ஆனால், வங்கி ஊழியர்கள் வழக்கம் போல அதனைக் கண்டு கொள்ளவில்லை.

பல்வீந்தர்சிங்கின் பாஸ்புக்கை மட்டும் நவம்பர் 7ம் தேதி வரை பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளனர். பின்னர் தவறு கண்டுபிடிக்கப்பட்டு, அடுத்த நாளே அவரது கணக்கில் இருந்து 9,806 கோடியும் காணாமல் போய் விட்டது. பின்னர் பல்வீந்தரின் பாஸ்புக்கை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து பல்வீந்தர்சிங் கூறுகையில், ”நான் பிரதான் மந்திரி ஜன் யோதான் திட்டத்தின் கீழ் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். சாதாரணமாக எனது வங்கிக் கணக்கில் 3 ஆயிரம்தான் இருக்கும். ஆனால் நசம்பர் 4ம் தேதி எனது கணக்கில் கோடிக்கணக்கானத் தொகை இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றேன். வங்கிக்கு தகவல் கொடுத்தும் உதாசீனப்படுத்தினர்” என்கிறார்.

இது குறித்து வங்கி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, ”பல்வீந்தர்சிங்கின் கணக்கில் 200 ரூபாய் வரவு வைப்பதற்கு பதிலாக வங்கியின் துணை மேலாளர் தவறுதலாக 11 டிஜிட் இன்டர்னல் பேங்கிங் பொது கணக்கு எண்ணை பல்வீந்தரின் கணக்கில் பதிவு செய்துள்ளார். அப்படித்தான் பல்வீந்தர்சிங்கின் கணக்கில் 9,806 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.

வருவாய்துறை இணைக்கமிஷனர் இதனை பூபேந்திர சிங் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ”வங்கி ஊழியர்கள் தொடர்ந்து இது போன்றத் தவறுகளை செய்து வருகின்றனர். கணக்கு வைத்திருப்பவர்களே முன்வந்து தவறினை சுட்டிக் காட்டினாலும் அதனை சட்டை செய்வதும் இல்லை” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏ.டி.எம்யில் பண பிரச்சனை விரைவில் தீர்வு காணப்படும்: உர்ஜித் படேல் அறிவிப்பு

தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் (ஏடிஎம்) போதிய பணம் கிடைப்பதில்லை என்பது உள்ளிட்ட பிரச்னைகள் விரைவில் தீரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்தார்.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு சுமார் 20 நாள்களுக்குப் பிறகு இப்போதுதான் ஆர்பிஐ கவர்னர் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை (சிஆர்ஆர்) 100 சதவீதமாக ஆர்பிஐ அதிகரித்துள்ளது. ஏனெனில், பொதுமக்கள் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிட்டதாலும், டெபாசிட் செய்து வருவதாலும் வங்கியில் இருப்புத் தொகை அதிகரித்துள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியான பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை ஆர்பிஐ நாள்தோறும் கவனித்து வருகிறது. பொதுமக்களுக்கு வழங்க போதுமான அளவு பணம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப அனைத்து ஏடிஎம்களையும் மாற்றி அமைக்கும் பணியில் நாடு முழுவதும் 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்ற நோட்டுகளை ஈடு செய்யும் வகையில் புதிய நோட்டுகளை அளிக்கப் போதுமான பணம் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும், ஆர்பிஐ-யும் இதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில், பொதுமக்கள் “டெபிட் கார்டு’, “டிஜிட்டல் வாலட்’ போன்ற ரொக்கமில்லாத பணப் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் எளிதாகவும், குறைந்த செலவிலும் நிகழும். இதனால் நீண்டகாலத்தில் இந்தியா பல்வேறு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ரொக்கத்தை அதிகம் பயன்படுத்தாத பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்.

பொதுமக்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வசதியாக “ஸ்வைப்பிங் மெஷின்’களை வியாபாரிகளுக்கு அதிக அளவில் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து வங்கிகளுடன் தினமும் ஆலோசிக்கப்படுகிறது. முதலில் இருந்ததைவிட இப்போது வங்கி, ஏடிஎம் வாயில்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பது பெருமளவில் குறைந்துள்ளது. பொது சந்தைகள் எவ்வித பாதிப்பும் இன்றி செயல்பட்டு வருகின்றன. நுகர்பொருள்கள் விற்பனை குறைந்துள்ளதாக தகவல் இல்லை.

பணத்தை வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் எடுத்துச் செல்லும் பணி முழுவீச்சில் நடக்கிறது. வங்கி ஊழியர்கள் மிகக்கடினமாக பணியாற்றி வருகிறார்கள். நேர்மையான குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க ஆர்பிஐ உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.

சென்னையில் 14 டன் புதிய ரூ.500 ரூபாய் நோட்டு!

பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக சென்னைக்கு ராணுவ விமானத்தில் ரூ.300 கோடிக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.

புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

தட்டுப்பாடு காரணமாக வங்கிகள் கேட்கும் தொகையை விடவும், குறைவான தொகையையே ரிசர்வ் வங்கி அனுப்புகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையை கொடுக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. மேலும் வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்கள் மூடிக்கிடக்கின்றன. திறந்து இருக்கும் சில ஏ.டி.எம்.களிலும் விரைவில் பணம் தீர்ந்து விடுகிறது. ஏ.டி.எம்.களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே கிடைப்பதால், சில்லரை கிடைக்காமல் அவதிப்படவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

புதிய 500 ரூபாய் நோட்டுகள் முழுஅளவில் புழக்கத்துக்கு வரும் போது நிலைமை சீரடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாக கடந்த புதன்கிழமை சேலத்தில் புதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகமானது. சென்னை நகரில் நேற்று முன்தினம் புழக்கத்துக்கு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் சில ஏ.டி.எம்.களில் மட்டும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன.

பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மத்திய அரசின் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகத்தில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாசிக்கில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்து 2 கன்டெய்னர் லாரிகளில் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

500 ரூபாய் நோட்டுகளை கொண்ட 120 பெட்டிகள் 2 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்த ரூபாய் நோட்டுகள் 14 டன் எடை இருக்கும் என்றும் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.300 கோடி மதிப்புள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்து இருப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த புதிய 500 ரூபாய் நோட்டுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் அனைத்து வங்கிகளுக்கும் 500 ரூபாய் நோட்டுகள் போய்ச் சேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு குறையும். வாடிக்கையாளர்களும் தங்கள் கணக்கில் இருந்து போதிய பணம் எடுக்க முடியும்.

இனி வரும் நாட்களில் மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றுவதற்கான ‘கெடு’ நேற்று முன்தினம் முடிவடைந்தது. ஆனாலும் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கி கணக்கில் டிசம்பர் 30-ந் தேதி வரை பொதுமக்கள் செலுத்தலாம்.

பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்து வருகின்றனர். இதனால் சில வங்கிகளிலும், பணம் டெபாசிட் செய்யும் எந்திரம் உள்ள ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்கள் கைவசம் உள்ள செல்லாத நோட்டுகளை புதிதாக கணக்கு தொடங்கினால் மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் வங்கிகளில் கணக்கு இல்லாத பலர் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

ரிசர்வ் வங்கியில் ரூ.2 ஆயிரம் அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

செல்லாத 500 ரூபாய் நோட்டுகளை அரசு ஆஸ்பத்திரி, பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மத்திய, மாநில அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம், செல்போன்களுக்கு பிரீபெய்டு கட்டணம், குடிநீர் வரி, மின்சார கட்டணம், மருந்தகங்கள், பஸ், ரெயில், விமான டிக்கெட், சமையல் கியாஸ் சிலிண்டர், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுக்கு அடுத்த மாதம் 15-ந் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஆனாலும், அரசு பஸ்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், செல்போன் பிரீபெய்டு கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான சேவை கட்டணங்களுக்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு சில இடங்களில் மறுத்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

10-ந் தேதியில் இருந்து வங்கி ஊழியர்களின் வேலைப்பளுவும் அதிகரித்தது. அவர்களுக்கு கடந்த 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மட்டுமே இடையில் விடுமுறை கிடைத்தது. இந்த நிலையில் இன்று 4-வது சனிக்கிழமை என்பதால், இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே இந்த 2 நாட்களும் வங்கிகளில் எந்த அலுவல்களும் நடைபெறாது. அடுத்து திங்கட்கிழமை தான் வங்கிகளில் பணப்பரிமாற்றம் நடைபெறும்.

ஆனாலும் இ-சேவை வசதி உள்ள ஏ.டி.எம். மையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை எந்திரங்களில் ‘டெபாசிட்’ செய்யலாம். ஒருவர் அதிகபட்சமாக ரூ.49 ஆயிரம் வரை ‘டெபாசிட்’ செய்ய முடியும்.

வங்கியில் வராத பணத்திற்கு 60% வரி? மோடியின் அடுத்த அவதாரம்

வங்கியில் கணக்கில் வராத டெபாசிட் பணத்திற்கு 60 சதவீதம் வரை வரி விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது. கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாகவும், தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஒரே வார்த்தையில் கூறுவது என்றால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மட்டுமே. ஏனெனில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினை அடுத்துப் பல கோடி ரூபாய் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நவ.9-ம் தேதி முதல் நவ.18-ம் தேதி வரையிலான கணக்கீட்டின் படி ரூ.5.4 லட்சம் கோடி அளவிலான பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தற்போது ஒரு கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான வங்கி வட்டி விகிதத்தை 1.9% வரை அதிரடியாகக் குறைத்துள்ளது. வட்டி குறைப்பைப் பொறுத்தவரை 7 முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 5% லிருந்து 3.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதைப்போல், 180 முதல் 210 நாட்கள் வரையிலான டெபாசிட் வட்டி விகிதம் 5.75% லிருந்து 3.85% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 211 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான வட்டி விகிதத்துக்கு 5.75% லிருந்து 4% வரையிலும், ஒரு வருடத்திலிருந்து 3 ஆண்டுகளுக்கு உண்டான வட்டி விகிதம் 6% லிருந்து 4.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 2016, நவம்பர் 24-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

ஆக ஒட்டுமொத்தத்தில் வீட்டுக் கடன், கார் கடன் என பலதரப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின் வங்கியில் கடன் வாங்கியவர்கள், இனி கடன் வாங்குபவர்கள் நிச்சயம் பலனை அனுபவிப்பார்கள்.

இன்று முதல் ஸ்டேட் பாங்க் எடிஎம்களில் புதிய 500 ரூபாய் நோட்டு

சென்னையில் இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வங்கிககளில் விநியோகம் செய்யப்படும் என்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாரத  ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப 60% ஏ.டி.எம்-கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.  மேலும், அவர் கூறியதாவது: வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக புதிய வங்கிக்கணக்கை துவக்கி தங்களது பணத்தை டெபாசிட் செய்யலாம்.  கடனுக்கான வட்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

புதிய ரூ.500 நோட்டுக்கள், சென்னையில் இன்று முதல்  விநியோகம் செய்யப்படும். மேலும், டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம்  செய்யப்படுவது அதிகரித்துள்ளது என்றும் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரி செலுத்த தேவை இல்லை

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வசூல் செய்யப்பட்ட சேவை வரி இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இண்டெர்நெட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டிற்கு சேவை வரி தள்ளுபடி செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று(நவ., 23) முதல் நடைமுறைக்கு வரும் இச்சலுகை, டிச., 31ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளற்ற பணப்பரிவர்த்தைனையை ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுக்கு ரூ.20-ம், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுக்கு ரூ.40-ம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா வங்கியில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொள்ளை

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணி வங்கிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக ஏராளமான பழைய நோட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த பணம் அனைத்தும் முறையாக சரிபார்த்து வாங்கப்பட்டு பத்திரப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் தேன்கனால் நகரில் உள்ள ஒடிசா கிராம்ய வங்கி கிளையில் வைக்கப்பட்டிருந்த டெபாசிட் பணம் திருடப்பட்டுள்ளது.

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் இன்று வங்கி திறக்கப்பட்டது. ஊழியர்கள் பணம் இருந்த அறைக்குசென்று பார்த்தபோது மொத்தம் உள்ள 8 கோடி ரூபாய் பழைய நோட்டுக் கட்டுக்களில் ஒரு இரும்பு பெட்டியில் இருந்த ரூ.1.15 கோடியை மட்டும் காணவில்லை. இவை அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ஆகும்.

பாதுகாப்பான அறையில் இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போனதால், வங்கி ஊழியர்களின் துணையில்லாமல் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று தேன்கனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேன்கனால் நகர் காவல் நிலையத்திற்கு மிகவும் அருகாமையில், கொள்ளை நடந்த இந்த வங்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் ரூ. 500, 1000 பயன்படுத்த சிறப்பு சலுகை

பிரதமர் நரேந்திர மோடி 8–ந்தேதி இரவு முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து மக்கள் தங்கள் கைவசம் உள்ள அந்த நோட்டுகளை மாற்ற வங்கிகள் முன்பு கடந்த 2 வாரமாக நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

இந்த அறிவிப்பால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக  பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, விவசாயிகள், மத்திய அல்லது மாநில அரசுகளின் வேளாண் மையங்களில் விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ. 500 தாள்கள் மட்டுமே கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உரங்கள் வாங்கி கொள்ளலாமா? என்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

More