எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை கருத்தரங்கு தொடங்கியது!

டாக்டர் எம் ஜி ஆர் மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை சார்பாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா 17.02.2017 அன்று, பல்கலைக்கழக தலைவர் திரு. A.C.S.அருண்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிவப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சென்குப்தா, பேராசிரியர் நம்பி அப்பாதுரை மற்றும் ஆர்க்கிடெக்ட் சங்கர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பதிவாளர் திரு. பழனிவேலு , இயக்குனர் மீனாட்சி பார்த்தசாரதி, டீன் சுவேதா மற்றும் துறைத்தலைவர் ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்க 1 கோடி வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த வருமான வரித் துறை

உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே, ரூ.5 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணத்தை டெபாசிட் செய்தவர்களில், 18 லட்சம் பேரிடம் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் வருமான வரித் துறை விளக்கம் கேட்டுள்ளது.

சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அதிக அளவில் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் மேலும் பலருக்கு அடுத்த கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

பணத்தை டெபாசிட் செய்தவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால், அவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் இருக்காது. அதே நேரத்தில் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருந்தால் அவர்களுக்கு உரிய முறையில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, அரசு எதிர்பார்த்ததைவிட பல கோடி ரூபாய் அதிகமாக டெபாசிட்டானது. இதில், கருப்புப் பணத்தைக் கண்டறிந்து, அதனை டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை வருமான வரித் துறை மேற்கொண்டுள்ளது.

இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்!

ஐபோன் பயன்படுத்துபவர்கள் இனி இண்டர்நெட் இல்லாமலேயே வாட்ஸ் அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியும்.

ஆப்பிள் ஐஓஸ் இயங்குதளத்தில் இணையதள வசதி இல்லாமலேயே வாட்ஸ் அப்பில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வசதியை வாட்ஸ் அப் ஐ.ஒ.எஸ் இயக்குதளத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட பதிப்பில் (2.17.1) பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய வசதியயை ஐபோன் , ஐபேட் போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய சேவை இன்னும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பயன்பாட்டில் வரவில்லை.

விவசாயிகளுக்கு 60 நாட்கள் வட்டி தள்ளுபடி தொடரும்

முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட 2016-17 பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

1 விவசாயிகளுக்கு 60 நாட்கள் வட்டி தள்ளுபடி தொடரும்.

2 பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும்

3 வரும் ஆண்டில் ஆன்லைன் மூலம் 350 படிப்புகள் வழங்கப்படும்

4 அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019 ஆம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.

5 தீன் தயாள் யோஜனா திட்டத்திற்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு

6 தூய்மை இந்தியா திட்டத்தின் பரப்பளவு 18% அதிகரிக்கப்படும்.

7 2019-ம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துக்களில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.

8 கரும்பு நிலுவைத்தொகை வழங்குவதற்காக ரூ.9,000 கோடி ஒதுக்கீடு

9 குஜராத், ஜார்க்கண்டில் புதியதாக எய்ம்ஸ் மருத்துவமனை

10 உயர்கல்வியில் புதுமையான திட்டங்கள் கொண்டு வரப்படும்

11 மருத்துவ மேற்படிப்புகளில் 5000 சீட்கள் அதிகரிக்கப்படும்

12 வீட்டு வசதி கடனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும்.

13 தொழிலாளர் சட்டம் எளிமையாக்கப்படும்

14 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ.1,84,630 கோடி ஒதுக்கீடு

15 தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் திட்டங்களுக்கு 35% நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

16 தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் திட்டங்களுக்கு ரூ.52,393 கோடி நிதி

17 பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு ரூ.31,920 நிதி ஒதுக்கீடு.

ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்தால் வரி ரத்து

இன்று தாக்கல் செய்யப்பட்ட 2016-17 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுடன், ரயில்வே துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இதில், ஐ.ஆர்.சி.டி.சி மூலம் டிக்கெட் முன் பதிவு செய்தால், சேவை வரி ரத்து செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அவர் தெரிவித்ததாவது:

ரயில்வே துறை:

1. ரயில்வேயில் பாதுகாப்பு, சீர்திருத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை

2. ரயில்வே துறை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ. 55 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

3. இந்த ஆண்டில் 3500 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைப்பு

4. வரும் ஆண்டில் 9 மாநிலங்களுடன் சேர்ந்து 70 புதிய ரயில் திட்டங்கள் நிறைவேற்றம்

5. 2019-க்குள் ரயில்பெட்டிகளில் பசுமைக் கழிவறை உருவாக்கப்படும்

6. 2020 ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் ஆளில்லாத ரயில்வே க்ராஸிங் இல்லாத நிலை உருவாக்கப்படும்.

7. நகரமயமாக்கலுக்கு வெகுவாக உதவும் மெட்ரோ ரயில் சேவைக்கு என புதிய கொள்கை உருவாக்கப்படும். அதன்மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

8. நாடு முழுவதும் 500 ரயில்வே நிலையங்கள் ஊனமுற்றவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படும்.

9. இனிமேல் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில்வே டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து

பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79-ம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை மாதந்தோறும் முறையே 1-ஆம் தேதியும், 16-ஆம் தேதியும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது சிறிது அதிகரித்திருப்பதால், அதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்படலாம் என்று கடந்த இரு தினங்களாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த விலை உயர்வு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டதாக ஊடகங்கள் வெள்ளிக்கிழமை காலையில் செய்திகளை வெளியிட்டன.

எனினும், ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டன. அப்போது, பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2.21-ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.79-ம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இதையடுத்து, தில்லியில் அந்த மாநில அரசு விதிக்கும் வரிகளுடன் சேர்த்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.68.94-க்கு (முந்தைய விலை ரூ.66.10) விற்கப்படுகிறது. இதேபோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.56.68-ஆக (முந்தைய விலை ரூ.54.57) உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில்…: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.41-ஆகவும் (முந்தைய விலை ரூ.65.58), டீசலின் விலை லிட்டருக்கு ரூ.58.28-ஆகவும் (முந்தைய விலை ரூ.56.10) உயர்த்தப்பட்டுள்ளன.

கலாநிதி மாறன் உள்பட ஏழு பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் (பிஎஎஸ்என்எல்) தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட ஏழு பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இது தொடர்பாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் அத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது சென்னை, தில்லி ஆகிய இடங்களில் உள்ள அவரது இல்லங்களில் பொதுத் துறை தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் மூலம் மொத்தம் 353 தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் இருந்தன. அவற்றுக்குரிய அழைப்புக் கட்டணமோ வாடகைக் கட்டணமோ செலுத்தப்படவில்லை. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1,20,87,769 அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரித்த போது, தயாநிதி மாறனின் சென்னை இல்லங்கள், தில்லி இல்லம் ஆகியவற்றில் மொத்தமாக 764 தொலைபேசி இணைப்புகள் இருந்ததும், அவற்றுக்குரிய அழைப்புக் கட்டணமோ, வாடகைக் கட்டணமோ செலுத்தாததால், பிஎஸ்என்எல் சென்னை, மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனம் (எம்டிஎன்எல்) ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.1,78,71,393 அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

சென்னையில் உள்ள தனது போட் கிளப் இல்லத்தில் பிஆர்ஏ, ஐஎஸ்டிஎன், லீஸ்ட் லைன் உள்ளிட்ட உயர் ரக தொலைத்தொடர்பு வசதிகள் அடங்கிய இணைப்புகள் சட்டவிரோதமாக “சேவை’ பிரிவின் கீழ் இருந்துள்ளது. குறிப்பாக, 2004, ஜூன் முதல் 2006 டிசம்பர் வரை சுமார் 364 தொலைபேசி எண்கள் அல்லது இணைப்புகள் தயாநிதி மாறனின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்துள்ளது. 2006, டிசம்பர் முதல் 2007 செப்டம்பர் வரை தயாநிதி மாறனின் சென்னை போட் கிளப் சாலை முதலாவது அவென்யூவில் உள்ள புதிய இல்லத்தில் சுமார் 353 இணைப்புகள் இருந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, அவரது வாய்மொழி உத்தரவின்பேரில் 10 போஸ்ட்-பெயிட் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்பது இணைப்புகள் தனியார் தொலைக்காட்சி (சன் டிவி) பயன்பாட்டில் இருந்துள்ளது. அவை “சேவை’ பிரிவின் கீழ் இருந்ததால் அவற்றுக்கு மாதக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இணைப்புகள் மூலம் குரல், காணொலி, ஒலி பரிமாற்ற உயர் தொழில்நுட்ப வசதிகள் தயாநிதி மாறனின் சகோதரர் (கலாநிதி மாறன்) நடத்தி வந்த தனியார் தொலைக்காட்சிக்காக பயன்பாட்டில் இருந்துள்ளன. இந்த இணைப்புகளுக்கான சாதனங்களை நிறுவியதற்கோ, கோபாலாபுரம் – சென்னை இல்லங்களை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் உயர் தொழில்நுட்ப ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் நிறுவியதற்கும் எவ்விதக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மேலும், சரியான ஆவணங்களோ பராமரிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக பல்வேறு நிலைகளில் சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக தயாநிதி மாறன் மீதும், அவருக்கு உதவியதாக சென்னை பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர்களாக இருந்த பிரம்மநாதன், எம்.பி.வேலுசாமி, தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கௌதமன், சன் டிவி நிறுவனத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், அந்நிறுவனத்தின் தலைமை எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி, நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 120பி (உள்நோக்கத்துடன் குற்றம்புரிதல்), 409 (நம்பிக்கை துரோகம் இழைத்தல்), 420 (மோசடி செய்தல்); ஊழல் தடுப்புச் சட்டம் 13(2) பிரிவு (அரசுப் பணியில் இருந்து கொண்டு குற்றமிழைத்தல்), 13(1)(டி) பிரிவு (பிறர் ஆதாயம் அடைவதற்காக தனது அதிகாரத்தைத் தவறாகவோ சட்டவிரோதமாக பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மீதான மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2007-இல் சிபிஐக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, விசாரணை நடத்திய சிபிஐ, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலருக்கு பரிந்துரை செய்தது. ஆனால், மத்தியில் 2011-இல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தயாநிதி மாறன் சார்ந்த திமுக அங்கம் வகித்தது. இதனால், யார் மீதும் தொலைத்தொடர்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே, பிரபல பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக வழக்குகளைத் தொடுத்தார்.

இதையடுத்து, நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து 2011-இல் ஆரம்பநிலை விசாரணையைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2013-இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி தயாநிதி மாறனின் உதவியாளர் கௌதமன், கண்ணன், ரவி ஆகியோரை சிபிஐ கைது செய்தது. தற்போது மூவரும் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏழு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தயாநிதி மாறனின் சென்னை இல்லங்கள், தில்லி இல்லம் ஆகியவற்றில் மொத்தமாக 764 தொலைபேசி இணைப்புகள் இருந்ததும், அவற்றுக்குரிய அழைப்புக் கட்டணமோ, வாடகைக் கட்டணமோ செலுத்தாததால், பிஎஸ்என்எல் சென்னை, மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனம் (எம்டிஎன்எல்) ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.1,78,71,393 அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரொக்கமில்லா மின்னணு பரிவர்த்தனைக்கு 11 புதிய சலுகைகள்

ரொக்கமில்லா மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 11 புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்துக் கொண்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, செல்லிடப்பேசி செயலிகள், மின் பணப்பை (இ-வாலட்) போன்ற மின்னணு பரிவர்த்தனைகளுக்கு பொதுமக்கள் மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கும் விதமாக, 11 புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் வியாழக்கிழமை அறிவித்தார். அதன் விவரம்:

 1. பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவோருக்கு 0.75 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
 2. 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு லட்சம் கிராமங்களுக்கு தலா 2 ஸ்வைப்பிங்கள் இயந்திரங்கள் வழங்கப்படும்.
 3. விவசாயக் கடன் அட்டைகளை வைத்திருக்கும் 4.32 கோடி விவசாயிகளுக்கு நபார்டு வங்கிகள் மூலமாக “ரூபே கிஸான்’ அட்டைகள் வழங்கப்படும்.
 4. மின்னணு பரிவர்த்தனை மூலம்,ரயில்வே மாதாந்திர அல்லது சீசன் டிக்கெட் வாங்குவோருக்கு 0.5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
 5. இணையவழி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலான இலவச விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.
 6. ரயில்வே துறையில் வழங்கப்படும் உணவு, தங்குமிடம், ஓய்வறை ஆகியவற்றுக்கான கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
 7. புதிதாக எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவோர், இணைய வழியில் பணம் செலுத்தினால் 8 சதவீத தள்ளுபடியும், தவணைத் தொகையை செலுத்துவோருக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.
 8. இணையவழியில் செலுத்தப்படும் தொகைக்கு பரிவர்த்தனைக் கட்டணம் மற்றும் வர்த்தகர்களிடம் வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு வசூலிக்காது.
 9. நாடு முழுவதும் வணிகர்களுக்கு வங்கிகள் வழங்கியுள்ள 6.5 லட்சம் ஸ்வைப்பிங் மற்றும் மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்களுக்கு மாத வாடகையாக, ரூ.100க்கும் அதிகமான தொகை வசூலிக்கப்படமாட்டாது.
 10. ரூ.2,000-க்கும் குறைவான மின்னணு பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி விதிக்கப்படாது.
 11. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆர்எஃப்ஐடி கார்டு அல்லது ஃபாஸ்ட் டேக் கார்டுகள் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவோருக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
2000 ரூபாய் வரை டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரி இல்லை

ரூ.2000 வரை டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி நள்ளிரவு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மக்களிடம், ரொக்கமற்ற மின்னணு பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு காஸ் சிலிண்டர் 7வது முறையாக உயர்வு

வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை,  அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப மாதத்துக்கு இரண்டு முறை பெட்ரோல் மற்றும் டீசல்  விலையை இந்தியா மாற்றி அமைக்கின்றன.  இந்த வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசு உயர்த்தப்பட்டது. டீசல் லிட்டருக்கு 12  காசு குறைக்கப்பட்டது.

ஆனால் விமான பெட்ரோல் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,881 குறைக்கப்பட்டு, ரூ.48,379.63 ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் இது 3.7 சதவீதம் சரிவு. தொடர்ந்து 2 முறை உயர்த்தப்பட்ட பிறகு இந்த  விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டர், ஆண்டுக்கு 12 எண்ணிக்கையில் மானிய விலையில்  வழங்கப்படுகிறது. இதற்கான மானியம் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. மானியச்சுமையை குறைக்க சமையல் காஸ்  விலையை மாதம் 2 ரூபாய் வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி சமையல் காஸ் சிலிண்டர் ரூ.2.07  உயர்த்தப்பட்டுள்ளது.

இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 7வது முறையாக விலை அதிகரித்துளளது.  டெல்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.430.64ல் இருந்து ரூ.432.71 ஆகவும், சென்னையில் ரூ.418.14 ல் இருந்து ரூ.420.21ஆகவும்  உயர்ந்துள்ளது.

ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மேல் சந்தை விலையில் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். இதுவும் ரூ.54.50 உயர்ந்துள்ளது டெல்லியில் ஒரு  சிலிண்டர் ரூ.529.50ல் இருந்து ரூ.584 ஆகவும், சென்னையில் ரூ.538.50ல் இருந்து ரூ.593.50ஆகவும் அதிகரித்துள்ளது.  இதுபோல்  மண்ணெண்ணெய் விலை மாதத்துக்கு இரண்டு முறை லிட்டருக்கு 25 காசு வீதம் 10 மாதத்துக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி  தறே்பாது 9வது முறையாக மண்ணெண்ணெய் விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.17.51. ஆனால்,  பொதுவிநியோக திட்டத்தில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படவில்லை.