தீக்குளித்த வாலிபர் விக்னேஷ் எழுதிய பரபரப்பு கடிதம்!

காவிரி நீர் திறப்பு பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் தமிழகர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்பு பேரணி நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்தது. இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டோர் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பேரணி புதுப்பேட்டை லேங்ஸ் கார்டன் அருகே வரும் போது பேரணியின் பின்புறம் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கர்நாடக அரசை கண்டித்தபடி உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் சாலையில் விழுந்து அந்த வாலிபர் அலறித் துடித்தார். அருகில் இருந்தவர்கள் வாலிபர் மீது பற்றிய தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீயை உடனே அணைக்க முடியவில்லை. அருகில் இருந்த சாக்கு உள்ளிட்ட பொருட்களை ெகாண்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அந்த வாலிபர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. உடனே போலீசார் வாலிபரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபரின் சட்டை பையில் இருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்த வாலிபர் உடல் முழுவதும் 93 சதவீதம் தீக்காயங்கள் இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைபடி மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தீக்குளித்து தற்கொலை செய்தவர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் விக்னேஷ் (25) என தெரியவந்தது. ஒரே மகனான இவர், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து விட்டு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சைக்கிள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், விக்னேஷ் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். சிறு வயதில் இருந்தே தமிழ் மொழி மீது அதிக பற்றுள்ள அவர் தமிழர் நலன் காக்கும் போராட்டங்களில் அதிகளவில் கலந்து கொண்டதும் தெரியவந்தது.

பரபரப்பு கடிதம்

விக்னேஷ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மாணவர்களே கோபம் கொள். காவிரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டெடுக்க போராடுங்கள். விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள். சாராய ஆலையை மூட போராடுங்கள். இந்தி திணிப்பை எதிர்த்து 800க்கும் மேற்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல, புதிய கல்விக்கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு ‘நம் தாய்மொழி சாகக்கூடாது என்பதற்காக போகும் முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும்’. நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள். நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்கு செலுத்துங்கள். இவன்: பா.விக்னேஷ், திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்’ என்று கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் பதிவு: விக்னேஷ் நேற்றுமுன்தினம் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: ‘நாளை நடைபெறும் பேரணியில் பல தற்கொலை (தற்கொடை) போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஊடகங்கள் தங்கள் டிஆர்பி ரேட்டை உயர்த்திக்கொள்ள பேரணியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுகிறேன். அப்போதாவது, மான தமிழ் இனம் கொதித்து எழட்டும். மாணவர் போராட்டம் இம் மண்ணில் வெடிக்கட்டும்’ என கூறியுள்ளார். இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.