திருமணம் செய்வதாக ஆசைகாட்டி காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் கைது

காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்ததால், மனமுடைந்த பெண் தற்கொலைக்கு முயன்றார். வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த, காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த 23 வயது பெண் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும், சேத்துப்பட்டை சேர்ந்த விவேக்கும் (27) காதலித்து வந்துள்ளனர். விவேக் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். விவேக், அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதில் அவர் கர்ப்பம் ஆனார். ‘கர்ப்பத்தை கலைத்து விட்டால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று விவேக் கூறி உள்ளார். அதனை நம்பி அந்த பெண் கருவை கலைத்துள்ளார்.

இந்நிலையில், விவேக்கிற்கும், காஞ்சிபுரம் மாவட்டம், பேரமனூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று முன்தினம் திருமணம் நடத்த முடிவு செய்து, உறவினர்களுக்கு பத்திரிகை வழங்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாட்சாயிணி, கடந்த, 18ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

தற்கொலைக்கு முயன்றதன் காரணம் குறித்து பெற்றோர் கேட்டனர். அப்போது, விவேக் தன்னை ஏமாற்றியதை கூறினார். இதுகுறித்து, போளூர் அனைத்து மகளிர் போலீசில் தாட்சாயிணி புகார் செய்தார். இதனால் திருமண ஏற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, விவேக் தலைமறைவானார். போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, போளூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த அவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

More