குளச்சல் துறைமுகம் அமைக்க தமிழக அரசு ஆதரவு அளிக்கத் தயார்!

குளச்சல் துறைமுகம் அமைய தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கத் தயார் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குளச்சல் துறைமுகம் மேம்பாடு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கான சர்வேயை தொடங்குவதற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

இனையம் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் துறைமுகத்துக்கான கட்டுமானம் நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ராதாகிருஷ்ணன், இனயத்தை அந்த கட்டுமானம் பாதிக்காது என்று தெரிவித்தார்.

கடலில் இருந்து சீர்படுத்தப்பட்ட நிலத்தில்தான் இந்த துறைமுகம் கட்டப்படுமே தவிர, அங்கிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு இதனால் பாதிப்பு வராது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.

முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் இருந்தே குளச்சல் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தான் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக அப்போது முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார். ஆனால், மத்தியில் அடுத்தடுத்து அமைந்த அரசுகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

அனைத்து ஆதரவும் வழங்குவோம்: மத்திய அரசைப் போலவே தமிழக அரசும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது என்று குறிப்பிட்ட முதல்வர், இந்தத் திட்டத்துக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் மாநில அரசு வழங்கும் என்று அமைச்சரிடம் உறுதி அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையத்தை உருவாக்குவதற்குத் தேவையான நிலத்தை வழங்க வேண்டும் என்றும் முதல்வரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். அந்தத் திட்டத்துக்கான முன்மொழிவுகள் விரைவுபடுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

மேலும், புதுச்சேரிக்கு தெற்கேயுள்ள கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த, அதனை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தேசிய நெடுஞ்சாலைகள் என்று குறிக்கப்பட்ட சாலைகளின் பராமரிப்புக்கான நிதி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இருந்து கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பாகமான தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி இடையேயான சாலை மேம்பாடு-முன்னேற்றப் பணிகளை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துக் கொண்டுள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு தெற்கே உள்ள கிழக்குக் கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக எடுக்கப்பட்டால், அது சிறப்பாகப் பராமரிக்கப்படும் என்பதற்கு தேவையான முன்னுரிமையும், நிதியும் அளிக்கப்படும் என்பதற்கு மத்திய இணையமைச்சர் உறுதி அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள்-சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதி த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், திட்டங்கள்-வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காவிரி பிரச்னையை பொறுமையுடன் கையாண்டார்:

முதல்வருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

காவிரி பிரச்னையை முதல்வர் ஜெயலலிதா மிகவும் சிறப்பாகவும், பொறுமையுடனும் கையாண்டிருக்கிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு, பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குளச்சல் துறைமுகத்துக்கான ஆய்வுப் பணிகளைத் தொடக்க தமிழக அரசின் ஒத்துழைப்பு தருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சில சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவது குறித்து கேட்டதற்கு, முழு அதரவை முதல்வர் தெரிவித்தார். அதற்கு நன்றி.

காவிரி விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறப்பாக பொறுமையாகக் கையாண்டிருக்கிறார். முழு அடைப்பால் பிரச்னை ஏதுமில்லை. அமைதியான முழு அடைப்பை வியாபாரிகளே முன்வந்து நடத்தியிருக்கிறார்கள். இதற்கு தமிழக பாஜகவும் ஆதரவு தெரிவித்தது.

கர்நாடக கலவரத்துக்கு பாஜக தான் காரணம் என்பதைப் போல, பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போன்று சிலர் அறிக்கை விடுகிறார்கள். அவைகள் எல்லாம் பொருள் அற்ற வெற்று அறிக்கைகள் என்றார்.