தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு வாழ்கை படமாகிறது

பிரேசில், ரியோ நகரில் நடைபெற்ற 162 நாடுகள் கலந்து கொண்ட பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 23 விளையாட்டுகளில் 528 போட்டிகளில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான மாரியப்பன் தங்கவேலு சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். 5 வயதில் கால்கள் ஊனமடைந்து அதனால் முடங்கிப் போகாமல் உயரம் தாண்டி இன்று சாதனை நாயகனாக திகழ்ந்த மாரியப்பன் வாழ்க்கை படமாகிறது? ஆம்

ஐஸ்வர்யா தனுஷ் கடைசியாக இயக்கிய திரைப்படம், ‘வை ராஜா வை’. இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த ‘3’ திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர், பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத்தந்து பெருமை சேர்த்த ‘மாரியப்பன் தங்கவேலு’ வாழ்க்கை வரலாற்றுக் கதையை படமாக்க உள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷாருக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஐஸ்வர்யா தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் மாரியப்பன் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்று அறிவிக்கப்படவில்லை.

இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சீன் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா தனுஷ்.