பைரவா தமிழ் படத்தின் விமர்சனம்

விஜயின் வழக்கமான பாணியாக இருந்தாலும், அவரது ரசிகர்களுக்கான பொங்கல் விருந்தாகவே உள்ளது ‘பைரவா’.

லோன் வாங்கிட்டு ராவடி செய்யும் ரவுடிகளிடம் வசூல் செய்வதில் கில்லியான பேங்க் கலெக்‌ஷன் ஏஜெண்ட் விஜய், திருமண நிகழ்வு ஒன்றில் கீர்த்தி சுரேஷை கண்டதும் காதல் கொள்கிறார். கீர்த்தி சுரேஷிடம் தனது காதலை சொல்வதற்காக முயற்சிக்கும் விஜய், கீர்த்தி சுரேஷை சுற்றி இருக்கும் ஆபத்தையும், அதன் பின்னணி மற்றும் அதற்கு காரணமானவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்கிறார்.

கீர்த்தி சுரேஷிடம் காதலை சொல்வதுடன், அவரது ஆபத்துக்கு காரணமானவர்களை களை எடுக்க அவருடன் திருநெல்வேலிக்கு செல்லும் விஜய், அவர்களை எப்படி வீழ்த்தினார், அவர்களுக்கும் கீர்த்தி சுரேஷுக்கு என்ன சம்மந்தம், என்பது தான் ‘பைரவா’ படத்தின் மீதிக் கதை.

தனது ரசிகர்களை திருப்தி படுத்துவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தும் விஜய், இந்த படத்தில் மாணவர்களையும் திருப்திப் படுத்துகிறார்.

பல ஹீரோக்களால் சில விஷயங்கள் மட்டுமே செய்ய முடியும், சில ஹீரோக்களால் மட்டுமே பல விஷயங்கள் செய்ய முடியும். இதில், இரண்டாம் ரகத்தை சேர்ந்தவரான விஜய், அவருக்கே உரித்தான விஷயங்களை ரசிக்கும்படி செய்திருக்கிறார். அறிமுக காட்சியில் கிரிக்கெட் பேட் வைத்து வில்லன்களை பதம் பார்ப்பது, கல்யாண நிகழ்வில் வரும் பாடல், அதில் விஜய் கொடுக்கும் எக்ஸ்பிரஷன், வில்லன்களிடம் பேசும் வசனங்கள், மற்றும் சில தத்துவ வசனங்கள், என்று அனைத்தையுமே ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்.

எப்போதுமே இளமையாக இருக்கும் விஜய், விக்குடன் நடித்தது இந்த படத்திற்கு பெரும் பலவீனம் தான். சில காட்சிகளில் அந்த விக் முடியும் அழகாக தெரிந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் தெலுங்கு நடிகர்களை நினைவுப் படுத்தி விடுகிறது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருந்தாலும், திரைக்கதையில் ஓரம் கட்டப்பட்டுள்ள கீர்த்தி சுரேஷ், விஜயுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். எப்படியோ தனது வழக்கமான கண் அடிக்கும் யுக்தியை பயன்படுத்தியும், சிரித்துமே சமாளித்துள்ளவர், அதே ரெகுலர் நடிப்பையே வெளிக்காட்டியிருக்கிறார்.

மெயின் வில்லனாக ஜெகபதிபாபு, அவருக்கு அடுத்தபடியாக டேனியல் பாலாஜி. இருவரும் திருநெல்வேலி ரவுடிகளாக காட்டப்பட்டு இருந்தாலும், ஜெகபதிபாபுக்கு சுத்தமாக பொருந்தவில்லை. அவரது பேச்சி மற்றும் நடிப்பு இரண்டிலுமே நேட்டிவிட்டியும் இல்ல வில்லத்தனமும் இல்ல. டேனியல் பாலாஜி ஓரளவு மட்டுமே. தம்பி ராமையா பெயருக்கு மட்டுமே இருந்தாலும், சதிஷின் கவுண்டர்களும், அதற்கு விஜய் கொடுக்கும் பதிலும் சிரிக்க வைக்கிறது.

சந்தோஷ் நாராயணின் பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும், பின்னணி இசை மற்றும் தீம் சாங் எடுபடவில்லை. சுகுமாரின் ஒளிப்பதிவும், அனல் அரசின் ஆக்‌ஷன் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.

விஜயின் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி சினிமா ஆடியன்ஸுக்கும் பிடிக்கும் விதத்தில், ஆரம்ப திரைக்கதை அமைந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் திரைக்கதையில் எந்த வித சஸ்பென்ஸும், எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போவது படத்தை சற்று பலவீனமடையச் செய்கிறது. இருப்பினும், விஜய் தனது பர்பாமன்ஸ் மற்றும் வசனங்கள் மூலம் அந்த இடங்களில் ரசிகர்களை எண்டெர்டெயின் பண்ணிவிடுகிறார்.

ஜெகதிபாபு பிரதமரை கொலை செய்யப் போவதாக சொல்லி, அவரை போலீஸிடம் விஜய் மாட்டிவிடுவது, மிகப்பெரிய லாஜிக் மீறல். கமர்ஷியல் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது தான், அதற்காக, சமுதாயத்தில் மரியாதை உள்ள ஒரு மனிதர், பிரதமரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார், என்று போன் மூலம் வரும் தகவலை வைத்து அவரை போலீஸ் கைது செய்வது என்பது, பானைக்குள் யானையை அடைத்து வைப்பது போல உள்ளது. அதேபோல், படத்தின் இரண்டாம் பாகத்தின் நீளமும் ரசிகர்களை சற்று சோர்வடைய செய்துவிடுகிறது.

இதுபோன்ற சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத நகைச்சுவைக் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் இருந்தாலும், சில உச்சு கொட்ட வைக்கும் தத்து வசனங்கள், மாணவர்கள் மற்றும் குடும்பம் பற்றிய வசனங்கள் என்று படத்தை பாராட்டுவதற்கான அம்ஷங்களும் உண்டு.

மொத்தத்தில், ‘பைரவா’ குடும்பத்தோடு பார்க்ககூடிய மாஸ் கமர்ஷியல் படமாக உள்ளது.