டி20 தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி , 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.

இந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது.

முதலாவது 20 ஓவர் போட்டி கான்பூரில் 26 ஆம் தேதியும், 2-வது போட்டி நாக்பூரில் 29 ஆம் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 1 ஆம் தேதியும் நடக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியின் மாற்றம் குறித்து அணி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்திய தேர்வு குழுவினர் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

34 வயதான அமித் மிஸ்ரா கடைசியாக அக்டோபர் மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் அணியில் இடம் பிடித்து இருந்தாலும் அவருக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 27 வயதான பர்வேஸ் ரசூல் 2014-ம் ஆண்டில் டாக்காவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். 20 ஓவர் போட்டி அணியில் அவர் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணி வருமாறு:

லோகேஷ் ராகுல், மன்தீப்சிங், விராட்கோலி (கேப்டன்), டோனி, யுவராஜ்சிங், சுரேஷ்ரெய்னா, ரிஷாப் பான்ட், ஹர்திக் பாண்ட்யா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், யுஸ்வேந்திரா சாஹல், மனிஷ் பாண்டே, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், நெஹரா.