ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.3.73 கோடி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்ப சொத்து விவரத்தை நேற்று அவரது மகன் லோகேஷ் வெளியிட்டார். இதில் சந்திரபாபு நாயுடுவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.73 கோடி என்றும், கடன் தொகை ரூ.3.06 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து தனது சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சொத்து விவரங்களை அவரது மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலாளருமான லோகேஷ் நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: ஹெரிடேஜ் நிறுவனம் கடந்த 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் வருவாய் தற்போது இரட்டிப்பாகி உள்ளது. இந்நிறுவனம் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தற்போது ரூ. 3.73 கோடி சொத்து உள்ளது. அதில் கடனாக ரூ. 3.06 கோடி உள்ளது. தவிர அவருக்கு சொந்தமாக பழைய அம்பாசிடர் கார் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ. 1.56 லட்சமாகும். தாய் புவனேஸ்வரியின் நிகர சொத்து ரூ. 24.84 கோடி. அதில் தங்க நகைகளின் மதிப்பு ரூ. 1.27 கோடி. இது தவிர அசையா சொத்து வகையில் எனது மனைவி பிராம்மனி பெயரில் ஹைதராபாத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள நிலம், ரூ.3.50 கோடி மதிப்பில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வீடு, ரூ.48 லட்சத்தில் சென்னையில் வணிக வளாகம் ஆகியவை உள்ளன.

இதில் பேரன் தேவான்ஷ் சொத்து மதிப்பு தாத்தா சந்திரபாபு நாயுடுவை விட அதிகமாக உள்ளது. தேவான்ஷ் பெயரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரூ. 9.17 கோடி மதிப்பில் வீடும். நிரந்திர வைப்புத் தொகையாக ரூ. 2.4 கோடியும், வங்கியில் கையிருப்பாக ரூ. 2.31 லட்சமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.