அமித்ஷா மற்றும் அருண் ஜெட்லி இன்று ஜெயலலிதா உடல்நலம் பற்றி அறிய சென்னை வருகை

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பற்றி விசாரிக்க பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி ஆகியோர் இன்று சென்னை வருகிறார்கள். நேற்றுடன் அவர் 20வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அங்குள்ள டாக்டர்களிடம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும் பல்வேறு மாநில அமைச்சர்கள், கவர்னர்களும் மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தனர்.

நேற்று முன்தினம் கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராய் விஜயன், புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். நேற்று காஷ்மீர் உணவுத்துறை அமைச்சர் சவுதாரி ஜுல்ப்கர் அலி மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று சென்னை வரவுள்ளனர்.

ஏற்கனவே அரசியல் தலைவர்கள் மு.க ஸ்டாலின், தொல்.திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு மற்றும் பலர் நலம் விசாரிக்க வந்து சென்ற நிலையில், முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் உடல்நலம் குறித்து கேட்டறியவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்கு பிரதமர் மோடி, வருவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு டெல்லியில் பல பணிகள் உள்ளன. மேலும் எய்ம்ஸ் குழுவினர், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வரின் உடல் நிலையும் தேறி வருவதாக, அவர்கள் மூலம் பிரதமருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையும் பிரதமர் கவனத்தில் எடுத்துள்ளார்.

நோய் தொற்றுகள் முதல்வருக்கு ஏற்படும் என்ற காரணத்தால் யாரையும் மருத்துவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. இதுவும் பிரதமரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, பிரதமர் உடனடியாக வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் உளவு பார்க்கத்தான் வந்தார்கள் என்பது தவறு. அவர்கள், முதல்வருக்கு சிகிச்சை அளிக்கத்தான் வந்துள்ளார்கள். இவ்வாறு தரம் தாழ்ந்து ேபசுவது, தமிழ் பண்பாட்டுக்கே இழுக்கு. அப்படி என்றால் முதல்வரை பார்க்க வருபவர்கள் எல்லாம் உளவாளியா? நானும் சென்று பார்த்தேன். அப்படி என்றால் நானும் உளவாளியா? இவ்வாறு அவர் கூறினார்.