சுற்றுலா வந்த அமெரிக்க ஆசிரியைக்கு நேர்ந்த பாலியல் தொல்லை

அமெரிக்க நாட்டை சேர்ந்த ஹன்னா கவியோஸ்( வயது 23) ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். தனது விடுமுறையை கொண்டாட தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றார்.ஆசிரியையாக பணிபுரியும் இவர் தெற்கு தாய்லாந்தில் உள்ள க்ரபி  என்ற பகுதியில் தங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள பகுதிகளை சுற்றி பார்த்தபோது இரவு 11 மணி ஆகியுள்ளது. தங்கியுள்ள வீட்டிற்கு தனியாக திரும்பிச் செல்ல பயந்த  அவர் அருகில் உள்ள சுற்றுலா தள அலுவலகத்திற்கு சென்று உதவி கேட்டுள்ளார்.

அப்போது, அங்கு பணிபுரிந்த 28 வயதான நபர் அவரை அழைத்துச் சென்று அறையில் விட சம்மதித்துள்ளார். நபரின் தோற்றத்தை கண்ட பெண் எதோ விபரீதம் நடக்கப் போகிறது என சந்தேகம் அடைந்துள்ளார். வேறு வழியில்லாத காரணத்தினால் அவருடன் காட்டுப்பகுதியில் நடந்துச் செல்ல சம்மதித்துள்ளார்.

ஆனால், தங்கியுள்ள அறையை நோக்கி செல்லாமல் அந்த நபர் ஹன்னாவை எதிர் திசையில் மலையின் உச்சிக்கு செல்லும் வழியில் அழைத்துச் சென்றுள்ளார்.

சில நிமிடங்கள் பயணத்திற்கு பின்னர் திடீரென அந்த நபர் பெண் மீது பாய்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். ஆனால், நபரின் தாக்குதலை எதிர்க்கொண்ட பெண் அவரது காதை பாதியாக கடித்து துப்பிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

வழி முழுவதும் இருட்டாக இருந்ததால், ஓரிடத்தில் மலை உச்சியில் இருந்து கீழே தவறி விழுந்து விட்டார். இதில், அவரது இடுப்பு எழும்பு உடைத்துள்ளது.

இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட நபர் வலியால் கதறி துடித்த பெண்ணிடம் பாலியல் தாக்குதலை நடத்தியுள்ளார். சில மணி நேரத்திற்கு பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். ஓர் இரவு முழுவதும் பெண் அதே இடத்தில் வலியால் துடித்துள்ளார். மறுநாள் காலையில் அவ்வழியாக சென்ற நபர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.