அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிக்க பகுதியான மத்திய ஒக்லஹோமா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஒக்லஹோமா மாகாணம், கஷிங் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.44 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.0 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால், நகரின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இருப்பினும், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.

பூமி சுமார் 10 நொடிகள் வரை பயங்கரமாக குலுங்கியதன் காரணமாக பழைய கட்டங்களில் வசித்தவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் சிலர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் தாக்கம், அயோவா, இல்லினாய்ஸ் மற்றும் டெக்சாஸ் மாகாணங்கள் வரை உணரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனேசியாவின் பண்டே மாகாணத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டே மாகாணத்தின் தென்மேற்கே பூமிக்கடியில் இருந்து 271கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள நிலநடுக்கம் கடலுக்கு 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.