காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு 9-ம் தேதி கும்பாபிஷேகம்!

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு கடந்த, 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், 22 ஆண்டுகளுக்கு பிறகு, இப்போதுதான் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற 9-ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று காலை சிறப்பு பூஜைளுடன் கும்பாபிஷேகத் திருவிழா துவங்கியது. இவ்விழாவில் தொடர்ந்து, 8-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து 9-ம் தேதி காலை 7.30 மணிக்கு 7-வது கால யாகசாலை பூஜையும், 8.30 மணிக்கு மஹாபூர்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற உள்ளது.

மேலும், தொடர்ந்து புனர்வசு நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மீன லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  தினந்தோறும் பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் வாய்ப்பாட்டு, வயலின், மாண்டலின், புல்லாங்குழல் உள்ளிட்ட இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.