தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு சவால் விட்ட நடிகர் விஷால்

தனது அதிரடி நடவடிக்கை மூலம் பேருந்துகளில் புதிய படங்களை ஒளிபரப்புவதை கட்டுப்பத்தியுள்ள நடிகர் சங்க செயலாளர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

வரும் ஏப்ரல் மாதம் அதற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய படங்களை வெளியிடும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு அவர் சவால் விட்டுள்ளார்.

பரத், பிரேம்ஜி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிம்பா’. அரவிந்த் ஸ்ரீதர் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இதில், இயக்குநர்கள் மிஷ்கின், காந்திகிருஷ்ணா, வெங்கட் பிரபு, நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, பிரசன்னா, பிரித்வி பாண்டியராஜன், அரவிந்த், அஜய், நடிகைகள் சினேகா, தன்ஷிகா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இதில் பேசிய விஷால், “தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகும் எந்த படமும் கண்டிப்பா வெற்றி பெரும். தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கு பின் தான் இந்த படம் வெளியாகும். அந்த சமயத்தில் இந்த படம் எந்த இணையதளத்திலும் வெளியாகாது என நான் உறுதியா சொல்கிறேன். ஏப்ரல் 2க்கு பின் நீயா நானா என்று பாத்துக்கலாம்” என்று சவால் விட்டார்.