இயக்குநருக்கு உதவிய நடிகர் சந்தானம்!

காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். அவர் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், அவரை வைத்து படம் தயாரிக்க பல முன் வருவதோடு, செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களும் சந்தானத்தை ஹீரோவாக வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சந்தானம் காமெடி நடிகராக இருந்த போது, இயக்குநர் ராஜேஷ் தனது படங்களில் சந்தானத்திற்கு ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் கொடுப்பார். ராஜேஷ் – சந்தானம் கூட்டணியில் வெளியான `சிவா மனசுல சக்தி’, `பாஸ் என்கிற பாஸ்கரன்’, `ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. ஆனால், `ஆல் இன் ஆல் அழகு ராஜா’, `வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால் ராஜேஷுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. மேலும், அவர் ஜி.வி.பிரகாஷை வைத்து ராஜேஷ் இயக்கிய ‘கடவுள் இருக்கான் குமாரு’ மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்ததால், அவர் ஓரம் கட்டப்பட்டார்.

இந்த நிலையில், தன்னை தூக்கிவிட்ட இயக்குநர் ராஜேஷுக்கு தோள் கொடுக்கும் வகையில் சந்தானம், அவருக்கு வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார். சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை ராஜேஷுக்கு சந்தானம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாக உள்ள இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிப்பார் என்று கூறப்படுகிறது.