ரம்ஜான்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

ரம்ஜான்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ரம்ஜான் திருநாளையொட்டி, இஸ்லாமிய பெருமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: ரம்ஜான் திருநாளையொட்டி முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புனித குரான் கூறியுள்ள கொள்கைகளை பின்பற்றி உண்மையான, உத்தமமான வாழ்க்கையை மேற்கொள்ள தீர்மானிப்போம்.

உண்ணாநோன்பை முடித்துக் கொள்ளும் இந்த திருநாளானது, நம்மிடையே பகிர்ந்து கொள்ளுதல், ஈகை, அன்பு, கருணை, பரஸ்பர நட்பு, சமாதானம் போன்ற நற்குணங்களை பரப்பட்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்; இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் எனது உள்ளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள் ஆகும். முப்பது நாள்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் நோன்பு இருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், பிணியுற்றவரைச் சென்று பாருங்கள், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று நபிகள் நாயகம் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும்.

தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும்.

இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Post