சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு: சச்சின் வழங்கினார்

சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு: சச்சின் வழங்கினார்

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவலுக்கு பி.எம்.டபுள்யூ கார் வழங்கினார் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

நேற்று ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த கார்சாய்னாவுக்கு வழங்கப்பட்டது.

பி.எம்.டபுள்யூ காரை சாய்னாவுக்கு வழங்கி சச்சின் பேசுகையில், சாய்னா சந்தோசமாக இருக்கலாம். ஆனால் அவர் திருப்தி அடைந்திருக்க மாட்டார். ஒரு சிறந்த விளையாட்டு வீரரான உங்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதைவிட இன்னும் சிறப்பாய் செயல்பட்டு உங்கள் திறமையை இந்த உலகிற்கு காட்ட வாய்ப்புகள் நிறைய உள்ளன என்று நம்புங்கள். அதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி ஆகியவையே இந்த பதக்கம் வெல்வதற்கான காரணம். அதவாது இந்த வெற்றி இந்தியாவிற்கு நிறைய செய்திகளை சொல்வதாக உள்ளது என்றார் அவர்.

வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த சாய்னா நேவால் பேசியதாவது,

எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது நான் ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்று பதக்கம் பெறுவதாக கனவு கண்டேன். ஆனால் இப்போது அது நிறைவேறி இருப்பது என்னால் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

இந்த வெற்றியை பெறுவதற்கு எனக்கு கடுமையான பயிற்சி அளித்த எனது மாஸ்டர் கோபி ஐயா அவர்களுக்கு நான்  நன்றி சொல்லிகொள்கிறேன். என்னால் கொண்டுவரப்பட்ட இந்த முதல் பதக்கம் இந்திய இறகுப்பந்து விளையாட்டியில் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும். இனி நாட்டிற்காக இன்னும் நிறைய பதக்கங்களை நாங்கள் பெற்று தருவோம்.

நமது நாட்டில் கிரிகெட் விளையாட்டுப் போட்டிக்கு நல்ல வரவேற்பு  இருக்கிறது. அதுபோல் இல்லாவிட்டாலும் ஒரு சிறந்த விளையாட்டாக இறகுப்பந்து மாறும் என்று நான் நம்புகிறேன். என்று அவர் கூறினார்.

Share This Post