பாஜகவுக்காக ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை: இது தான் உங்கள் ஜனநாயகமா?

பாஜகவுக்காக ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை: இது தான் உங்கள் ஜனநாயகமா?

பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியரும் சமூக ஆர்வலருமான கோவிந்தராஜ் தஞ்சை அருகே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் பிரதமர் நரேந்திர‌ மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

இவர் ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் பார்ப்பவர்களை எல்லாம் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வாராம்.

இந்த நிலையில் கோவிந்தராஜ் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்று இரவு மோடியின் படத்தை கழுத்தில் போட்டு கொண்டு பா. ஜனதாவுக்கு ஆதரவாக தனியாக நின்று பிரசாரம் செய்தார். அங்குள்ள கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார். கோபிநாத் வேறு கட்சியின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

பின்னர் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் அலறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். அப்போது அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

சமூக ஆர்வலரை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பாஜக மற்றும் அதிமுகவினர் நீதி கேட்டு பெருமளவில் திரண்டனர்.

Share This Post