பார்க்கத் தானே போறீங்க இந்த பழனிசாமியோட ஆட்டத்தை: ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் ஓப்பன் சவால்

பார்க்கத் தானே போறீங்க இந்த பழனிசாமியோட ஆட்டத்தை: ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் ஓப்பன் சவால்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஸ்டாலினின் சொற்களால் கொதிப்படந்த ஈபிஎஸ், “தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னை விமர்சிக்கலாம், ஆனால் விவசாயிகளை விமர்சிக்கக்கூடாது. முதல்வர் என்ற மரியாதை இல்லாமல் என்னை தரக்குறைவாக பேசுகிறார், நாங்கள் பதிலுக்கு பேச ஆரம்பித்தால் ஸ்டாலினின் காதிலுள்ள செவிப்பறை கிழிந்துவிடும்,” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “தேர்தலுக்கு பின் எடப்பாடியின் அரசியல் வாழ்க்கையே கிழியும், திமுக மாபெரும் வெற்றி பெறும்,” என பேசி இருந்தார். இந்நிலையில், இதற்கு இன்று சேலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில், முதல்வர் காட்டமான பதிலளித்தார்.

“ஸ்டாலின் செல்லும் இடங்களிலெல்லாம், அதிமுக ஆட்சியிலே என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்கிறார். ஸ்டாலின் அவர்களே.. சேலத்துக்கு வந்துவிட்டுதானே போனீர்கள்? 

நீங்கள் வருகிறபோது சேலத்தில் இருக்கிற பாலங்கள் அதற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றன. சேலத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் அதிமுக ஆட்சியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல பாலங்கள் விரைவில்  திறக்கப்பட உள்ளன,” என்றார்.

மேலும் அவர், “மக்களுக்காக சேவை செய்கிற அதிமுக அரசை கொச்சைப்படுத்தி ஸ்டாலின் பேசுகிறார். என்னுடைய அரசியல் வாழ்க்கை கிழியப்போகிறது எனச் சொல்லியிருக்கிறார். இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் இந்த எடப்பாடி பழனிச்சாமியினுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கப்போகிறது. உங்களுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோதும் பலிக்காது. ஏற்கனவே கண்ட கனவெல்லாம் கானல் நீராகி விட்டது. அந்த விரக்தியில் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். எந்தக் காலத்திலும் அந்தக் கனவு நிறைவேறாது,” என்றார்.

Share This Post