எங்கள் வெற்றி, உங்கள் வெற்றி: இளைஞர்களுக்கு பாஜகவின் சிறப்பு வாக்குறுதி‍‍‍ ‍- மக்கள் முரசு எக்ஸ்க்ளூசிவ்

எங்கள் வெற்றி, உங்கள் வெற்றி: இளைஞர்களுக்கு பாஜகவின் சிறப்பு வாக்குறுதி‍‍‍ ‍- மக்கள் முரசு எக்ஸ்க்ளூசிவ்

நாங்கள் வெற்றி பெற்றவுடன் படித்த இளைஞர்கள் வேலைத் தேடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டியதில்லை, அவர்களுக்காக அவர்கள் சொந்த ஊரிலேயே பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். அதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன என்கிறார் பாஜக இளைஞர் அணியின் மாநில துணைத் தலைவரான சதீஷ்குமார் போன்ஸ்லே.

தேர்தல் வேலைகளில் பிசியாக இருக்கும் தொழிலதிபரும், முதல் தலைமுறை அரசியல்வாதியுமான சதீஷ்குமார், மக்கள் முரசுக்கு சிறப்பு பேட்டியளித்தார். “தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து சென்னைக்கோ அல்லது பெங்களூருக்கோ வேலைத் தேடி இளைஞர்கள் செல்வதால் தங்கள் குடும்பத்தை பிரிகின்றனர், விவசாயம் பாதிக்கிறது. இப்படி இன்னும் பல இன்னல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதற்கு நாங்கள் ஒரு சொல்யூஷன் யோசித்து, அதை செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டோம். முதற்கட்டமாக, ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனம் தஞ்சாவூரில் தனது கிளையைத் தொடங்க முன் வந்துள்ளது. இதனால் பல இளைஞர்கள் உள்ளூரிலேயே வேலை பெறுவர். இதன் மூலம் அவர்கள் பெற்றோரோடு இருப்பதோடு மட்டுமில்லாமல், விவசாயம் போன்ற சொந்தத் தொழிலையும் பார்த்துக் கொள்ளலாம். மேலும், பெருநகரங்களில் செய்ய வேண்டிய செலவுகளையும் பெருமளவு குறைத்து பணத்தை சேமிக்கலாம்.

அந்த நிறுவனத்திற்கும் தஞ்சாவூர் போன்ற இடங்களில் இயங்குவதால் நிர்வாக செலவுகள் மிச்சம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இது போல பல நிறுவனங்களை கொண்டு வருவோம். அதற்காக ஒரு ஸ்பெஷெல் டீம் முழு வீச்சில் வேலை செய்து கொண்டிருக்கிறது,” என்றார்.

பாஜக மதவாத கட்சி என்று குத்தப்பட்டுள்ள முத்திரையைப் பற்றியும் அதை அகற்றுவதற்கு எடுக்க‌ப்பட்டு வரும் முயற்சிகளை பற்றியும் கேட்டதற்கு பதலளித்த அவர், “மக்களை முன்பு மாதிரியெல்லாம் இப்போது ஏமாற்ற முடியாது. அவர்கள் உண்மைகளை புரிந்து வைத்துள்ளனர். இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் அவர்கள் பாஜக அரசின் திட்டங்களை புகழ்கின்றனர். ஜிஎஸ்டியால் விலைவாசி குறைந்துள்ளதை வரவேற்கின்றனர்.

அவர்களே பல இடங்களில் எங்களிடம், எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை பார்த்து தாங்கள் எரிச்சல் அடைவதாக தெரிவித்தனர். ஆகையால், எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பிரதமர் மோடி அரசின் சாதனைகள், மக்களின் மகத்தான ஆதரவு மற்றும் கூட்டணி கட்சியினரின் பலத்தால் நாங்கள் கட்டாயம் வெல்வோம்,” என்றார்.

மோடியிடம் தங்களுக்கு மிகவும் கவர்ந்தது என்ன? இந்தக் கேள்விக்கு பதிலளித்த சதீஷ்குமார், “அவர் மக்களின் பிரதமர். மக்களுக்கான பிரதமர். அவரின் ஆட்சியில் தான் இந்தியாவுக்கு உலக அளவில் மிகப் பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. நாடு பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. ஊழல் அறவே இல்லை. திட்டங்கள் மக்களை நேரடியாக செவ்வனே சென்றடைகிறது. தொழில் முனைவோர் அரசின் வெளிப்படைத் தன்மையாலும் விரைவான மற்றும் லஞ்சமற்ற நடைமுறைகளாலும் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,” என்றார்.

Share This Post