ரஜினிக்கு நன்றி, அவரின் ஆசை நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர்

ரஜினிக்கு நன்றி, அவரின் ஆசை நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர்

பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை வரவேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவரின் நீண்ட நாள் கோரிக்கையான நதிகள் இணைப்பு திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தமிழக பொறுப்பாளரான பியூஷ் கோயல், இன்று சென்னை வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “நதிகள் இணைப்பே தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாஜகவின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு நன்றி. பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும். 2022ம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.

நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக் கொண்டோம்,” என தெரிவித்தார்.

சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய ரஜினி, “பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். 
நதிகள் இணைந்தால் நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும்.

மக்களின் ஆதரவுடனும், ஆண்டவன் அருளாசியுடனும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும்,” என்றார்.

Share This Post