ஆட்சியில் இல்லாத போதும் ஊழலா? காங்கிரஸ் மீது பகீர் புகார்

ஆட்சியில் இல்லாத போதும் ஊழலா? காங்கிரஸ் மீது பகீர் புகார்

ஆட்சியில் இருக்கும் போது 2ஜி உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகளில்  காங்கிரசும் அதன் அமைச்சர்களும் சிக்கியது உலகுக்கே தெரியும். ஆனால் இப்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டு வருகிறதாம். இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறுவது வேறு யாரும் இல்லீங்க. சாட்சாத் நம்ம பிரதமர் மோடியே தான்.

குஜராத் மாநிலத்தில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய‌ மோடி, “பல்வேறு ஊழல்களின் பெயரால் காங்கிரஸ் கட்சி அறியப்பட்டு வருகிறது. அது தற்போது புதிய ஊழல் ஒன்றின் பெயரையும் பெற்று இருக்கிறது. அதுவும், ஆதாரத்துடன் சிக்கி இருக்கிறது. அதாவது ‘துக்ளக் சாலை தேர்தல் ஊழலில்’ காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இதில் ஏழைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான நிதியை கொள்ளையடித்து வருகிறார்கள்,” என்றார்.

இதை பற்றி விலாவரியாக பேசிய அவர், “டெல்லி துக்ளக் சாலையில் வசித்து வரும் முக்கியமான நபர் ஒருவரின் வீட்டில் இருந்து டெல்லியில் உள்ள ஒரு பெரிய கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ரூ.20 கோடி கைமாறியது தொடர்பான தகவல் ஒன்றை வருமான வரித்துறை கண்டுபிடித்து இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. (ராகுல் காந்தியின் அலுவலக இல்லம் துக்ளக் சாலையில் அமைந்துள்ளது)

காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்படுவதை கடந்த சில நாட்களாக நீங்கள் ஊடகங்களில் பார்த்து வருகிறீர்கள். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 6 மாதம் கூட இன்னும் நிறைவு பெறவில்லை. அதற்குள் அங்குள்ள காங்கிரசாரின் வீடுகளில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது,” என்றார்.

மேலும் அவர், “முதலில் கர்நாடகாதான் காங்கிரசின் ஏ.டி.எம். எந்திரமாக இருந்தது. தற்போது மத்திய பிரதேசம் அதன் புதிய ஏ.டி.எம்.மாக மாறி இருக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்காரிலும் இதுபோன்ற சூழல்தான் நிலவுகிறது. மக்களை கொள்ளையடிக்கவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர விரும்புகிறது.

மத்திய பிரதேசத்தில் தற்போது பிடிபட்ட பணம் வெறும் டிரெய்லர்தான். எனவே காங்கிரசின் கையில் நாட்டை கொடுத்தால், அப்புறம் எங்கள் கைகளில் எதுவும் இல்லை. காங்கிரசின் கதையே வெறும் ஒரு குடும்பத்தின் கதைதான்.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரசாரின் வீட்டு வாசல் வரை சிறையை கொண்டு வந்திருக்கிறேன். இன்னும் நீங்கள் எனக்கு அடுத்த 5 ஆண்டுகளை கொடுத்தால், அந்த சிறைக்குள் அவர்கள் இருப்பார்கள்,” என்றார்.

Share This Post