அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர்

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2019) கேரள மாநிலம் கொல்லம் சென்றார். தேசிய நெடுஞ்சாலை 66-ல் 13 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள, இருவழி கொல்லம் புறவழிச்சாலையை நாட்டிற்கு அவர் அர்ப்பணித்தார். கேரள மாநில ஆளுநர் நீதிபதி பி சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கே ஜே அல்போன்ஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே தமது அரசின் தலையாய பணி என்றார். கொல்லம் புறவழிச்சாலை இதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கு 2015 ஜனவரியிலேயே இறுதி ஒப்புதல் வழங்கப்பட்ட போதிலும், இப்போதுதான் அதற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது என்றார். சாமானிய மனிதனின் வாழ்க்கை முறையை எளிதாக்க, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கொள்கையில், தமது அரசு நம்பிக்கைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் கேரள அரசின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டினார்.

சாலை இணைப்பு வசதிகளை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடுகையில், தேசிய நெடுஞ்சாலைகள், கிராமச்சாலைகள் கட்டுமானப்பணி, இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் 56% கிராமப்புற குடியிருப்புகளுக்கே சாலை வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இது 90% அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கிராமப்புறங்களுக்கு 100% சாலை வசதி ஏற்படுத்துவது என்ற இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை தமது அரசுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மண்டல அளவிலான விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வேபாதை விரிவாக்கப் பணிகளால் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். “ நாம் சாலை மற்றும் பாலங்களை ஏற்படுத்துவதன் மூலம், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை இணைப்பதோடு மட்டுமின்றி, மக்களின் விருப்பங்களை சாதனைகளாக மாற்றுவதுடன், நம்பிக்கையை வாய்ப்புகளாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற முடியும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்

Share This Post