வருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்

வருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்

வருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்

சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையையடுத்து, அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூரு சிறையில் தனி அறை தயார் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

சசிகலா உறவினர்கள் வீடுகளில் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் 187 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ. 7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் சிக்கின.

ரூ.1430 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 70க்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி அதன் மூலம் ரூ.1,012 கோடிக்கு முறைகேடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சசிகலாவின் 4 அறைகளிலும், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையிலும் நடந்த சோதனையில் லேப்டாப், 2 செல்போன் டேப் மற்றும் ஏராளமான பென் டிரைவ்களும், சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆவணங்கள் மூலம் சசிகலா உறவினர்கள் நடத்தி வந்த போலி நிறுவனங்களின் குறியீட்டு எண்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்து உள்ளன.

இதை அடிப்படையாக கொண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ஒரு பெண் அதிகாரி தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று முதல் 24-ந்தேதி வரை 3 நாட்களுக்குள் சசிகலாவிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு வருமான வரித்துறை சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை பரப்பன அக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் கடிதம் கொடுத்தனர்.

இந்த கடிதத்தை அவர் கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மெகரித்துக்கு அனுப்பி வைத்தார். கூடுதல் டி.ஜி.பி.யும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளை அனுமதிக்குமாறு சிறை தலைமை சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த நேரமும் சசிகலாவிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சிறைக்கு வருவது குறித்து தகவல் எதுவும் வரவில்லை.

இது குறித்து சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் நிருபர்கள் கேட்டபோது, சசிகலாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் வருவது குறித்து இதுவரை தனக்கு எதுவும் தகவல்கள் வரவில்லை என்றார். ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதில் ரகசியம் காப்பதாக தெரியவந்துள்ளது.

முன்கூட்டியே விசாரணை நடத்தும் நேரத்தை தெரிவித்துவிட்டால் அந்த விசாரணை பாதிக்கும் என்பதால் அவர்கள் எப்போது விசாரணை நடைபெறும் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் சிறை நிர்வாகத்தினர் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு ஒரு அறையை தயார் செய்து வைத்துள்ளனர்.

பரப்பன அக்ரஹார பெண்கள் சிறை சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள மீட்டிங்ஹாலில் விசாரணை நடத்த அனுமதி அளித்து உள்ளனர். பெண்கள் சிறை சூப்பிரண்டு முன்னிலையிலேயே இந்த விசாரணை நடைபெற உள்ளது. 3 நாட்களுக்குள் விசாரணை என்றால் சிறை நிர்வாகம் அனுமதியின் பெயரிலேயே சசிகலாவிடம் விசாரணை நடத்தி முடிக்கலாம்.

ஒரு வாரத்துக்கு மேல் விசாரணை என்றால் கோர்ட்டில் அனுமதி பெற்று விசாரணை நடைபெறும்.

ஏற்கனவே கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியிடம் இதே சிறை வளாகத்தில் வைத்துதான் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அதேபோலத்தான் சசிகலாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணை விவரங்களை வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களுடன் வீடியோ கிராபர் ஒருவரையும் அழைத்து செல்ல உள்ளனர்.

விசாரணைக்கு வரும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Share This Post