என்ன ஆச்சு இந்திய ஹாக்கி அணிக்கு!

என்ன ஆச்சு இந்திய ஹாக்கி அணிக்கு!

டாக்கா: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதிக் கொள்ளும் எந்த விளையாட்டாக இருந்தாலும், அதற்கு தனி சுவாரசியம் உருவாகிவிடுவதை தவிர்க்க முடியாது. ஆசியக் கோப்பை ஹாக்கியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது. ஆனால் துவக்கத்தில் இருந்த வேகம் போட்டியின் கடைசியில் குறைந்து போனது.
ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகின்றது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மோதின.

இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், அடுத்தது வங்கதேசத்தை 7-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை 7-0 என்ற கணக்கில் வென்றது. ஜப்பானுடன் 2-2 என்று டிரா செய்தது. இரு அணிகளும் ஏற்கனவே அடுத்து நடைபெற உள்ள அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டன.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக உலக ஹாக்கி லீக் போட்டியில் விளையாடின. அதில் 7-1, 6-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. அணியின் கோச் மாற்றப்பட்ட சர்ச்சையில் இருந்து ஹாக்கி அணி தற்போது விடுபட்டுள்ளது.
அடுத்த உலக ஹாக்கி லீக் போட்டிகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. மேலும் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்த உள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடய இந்திய அணி, நேற்றைய போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப் பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது
முதல் பாதியில் காட்டிய வேகம், டெங்குவால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைப் போல திடீரென சோர்ந்து போய்விட்டது.
முதல் பாதியின் இறுதியில் 1-0 என்ற இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் மேலும் 2 கோல்கள் அடித்தாலும், கோலடிக்கும் பல வாய்ப்புகளை இழந்தது. தடுப்பாட்டத்திலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தான் இரண்டு வீரர்களை இழந்து, 9 பேர் மட்டுமே விளையாடியபோதும், அந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்த இந்தியா தவறிவிட்டது.
ஆசியக் கோப்பையில் முதல் மூன்று முறை, 1982, 1985, 1989ல் பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா, 2003, 2007ல் சாம்பியனானது. பாகிஸ்தான் கோப்பையை வென்ற மூன்று போட்டிகளிலும், இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் ஏழு முறை மோதியுள்ளன. அதில் 5 முறை பாகிஸ்தான் வென்றிருந்தது.
இந்த ஆசியக் கோப்பையின் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. பி பிரிவில் முதலிடம் பெறும் அணியுடன் இந்தியா விளையாடும். அதே நேரத்தில் பாகிஸ்தான் 3-வது இடத்துக்காக பி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியுடன் மோதும்.
பாகிஸ்தானை வென்றாலும், இன்னும் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றிருக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை இந்திய அணி இழந்தது.

Share This Post