ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – ஜப்பான் இன்று மோதல்

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – ஜப்பான் இன்று மோதல்

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – ஜப்பான் இன்று மோதல்

ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் இன்று மோதுகிறது.

ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வங்கதேச தலைநகர் டாக்காவில் இன்று தொடங்குகிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான கொரியா, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்கதேசம் அணிகளும் ‘பி’ பிரிவில் கொரியா, மலேசியா, சீனா, ஓமன் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் – வங்கதேசம் மோதுகின்றன. இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் 13-ம் தேதி வங்கதேசத்துடனும், 3-வது ஆட்டத்தில் 15-ம் தேதி பரம வைரியான பாகிஸ்தானுடனும் மோதுகிறது. லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி 22-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக அன்றைய தினம் 3-வது மற்றும் 4-வது இடத்துக்கான ஆட்டமும் நடத்தப்படுகிறது. இந்தத் தொடர் ஆசிய அளவில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

மேலும் இந்தத் தொடரானது இந்திய ஹாக்கிக்கு புதிய தொடக்கமாக இருக்கக்கூடும். ஏனெனில் இந்திய அணி புதிய பயிற்சியாளார் சோஜெர்டு மரிஜின் மேற்பார்வையில் இந்தத் தொடரை சந்திக்கிறது. மரிஜின் கூறும்போது, “ஆசிய கோப்பை தொடர் எனக்கு மட்டும் புதிய தொடக்கம் இல்லை, அணிக்கும் தான். கோப்பையுடன் நாடு திரும்புவதற்கு மனதளவில் முழுமையாக தயாராகி உள்ளோம்” என்றார். – பிடிஐ

Share This Post