இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து ஹர்த்திக் பாண்டியா: விராட் கோலி பாராட்டு

இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து ஹர்த்திக் பாண்டியா: விராட் கோலி பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து என கேப்டன் விராட் கோலி பாராட்டி உள்ளார்.

இந்தூர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டியிலும் வென்று இந்தியா அணி தொடரை கைப்பற்றி முத்திரை பதித்தது.

இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் சதம் அடித்தார். அவர் 125 பந்தில் 124 ரன்னும் (12 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் சுமித் 63 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்டும், பாண்டியா, யசுவேந்திர சஹால் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 38 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 224 ரன் என்ற நிலையில் இருந்தது. அந்த அணி 69 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது. ஏற்கனவே முதல் 2 ஆட்டத்திலும் வென்று இருந்ததால் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஹர்த்திக் பாண்ட்யா 72 பந்தில் 78 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்), ரோகித்சர்மா 62 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), ரகானே 70 ரன்னும் (9 பவுண்டரி) எடுத்தனர். கும்மின்ஸ், ஆஸ்டர் அகர், நாதன் கோல்ட்டர், ரிச்சர்ட்சன் 1 விக்கெட் எடுத்தனர்.

ஹர்த்திக் பாண்டியா 2-வது முறையாக இந்த தொடரில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த ஆடுகளத்தில் 330 முதல் 340 ரன்கள் வரை குவிக்கலாம். அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. மிடில் ஓவரில் 2 முதல் 3 விக்கெட்டை வீழ்த்தினால் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி விடலாம் என்று கருதினேன். அதன்படியே நடந்தது.

அந்த அணி 35 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்தது.

ஹர்த்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 முறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொந்தாகும். விலை மதிப்புமிக்க வீரராக இருக்கிறார்.

ஹர்த்திக் பாண்டியாவை முன்னதாக களம் இறங்கியது பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஆலோசனையாகும். இந்த வெற்றி எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது:-

38 ஓவர் வரை நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆனால் அதன்பிறகு இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்களது திட்டத்தை முறியடித்தனர். நாங்கள் 330 ரன்னுக்கு மேல் குவித்து இருக்க வேண்டும். கடைசி கட்ட ஓவர்களில் பும்ராவும், புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக பந்து வீசினார்கள். இதில் இருவரும் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.

ஹர்த்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. நாங்கள் போதுமான அளவுக்கு சவால் கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி வருகிற 28-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

Share This Post