ஜெயலலிதா மறைவு: உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய்

ஜெயலலிதா மறைவு தாங்காமல் உயிரிழந்த 77 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

அவரது மறைந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சி தாளாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 77 பேர் மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

மேலும் முதல்வர் உடல்நலம் குன்றிய செய்தி அறிந்து துயரம் தாளாமல் தீக்குளித்து தொடர்சிகிச்சை பெற்று வரும் கடலூர் கிழக்கு மாவட்டடம் விருத்தாசலம் ஒன்றியத்தைச் சேர்ந்த புதுகூரப்பேட்டை கிளைச் செயலாளர் கே.கணேசன், துக்கம் தாளாமல் விரலை வெட்டிக் கொண்ட திருப்பூர் மாவட்டம் உகாயனூரைச் சேர்ந்த மாகாளி ஆகியோர் முழு சிகிச்சை பெற்று நலம் பெற தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.