திருவண்ணாமலை அருகே: கார் மீது லாரி மோதி 7 பேர் பலி

திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதியதில் புதுப்பெண், 2 தம்பதிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, பூ.மலையனூர் கிராமம் புது காலனியைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் வாசுதேவன் (30). இவர் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். இவருக்கு டிசம்பர் 5-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு குடும்பத்துடன், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று வழிபட வாசுதேவன் திட்டமிட்டிருந்தார். அதன்படி, மனைவி சசிகலா (27) மற்றும் உறவினர்கள் 8 பேர் உள்பட மொத்தம் 10 பேர் வாடகை காரில் வியாழக்கிழமை இரவு திருப்பதிக்கு புறப்பட்டனர்.

திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் – எடப்பாளையம் இடையிலான பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஒசூரில் இருந்து புதுச்சேரிக்கு இரும்பு நாற்காலிகளை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தை, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் விரைந்து சென்று பார்த்தபோது, 7 பேர் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்து சுய நினைவின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்களை போலீஸார் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இறந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

டிஐஜி, மாவட்ட ஆட்சியர் ஆறுதல்: தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி செந்தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், பலத்த காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

விபத்து குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாசுதேவனின் மனைவி சசிகலா (27), செங்கல்பட்டு மாவட்டம், அளங்கிரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (39), இவரது மனைவி குமாரி (37), மகள் தர்ஷனா (8), விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டையை அடுத்துள்ள ஏமம் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு (60), இவரது மனைவி கொளஞ்சி (57), இதே கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான விஜயகுமார் (20) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்தவர்கள், அரசு ஊழியரும், புதுமாப்பிள்ளையுமான வாசுதேவன் (30), ஏமம் கிராமத்தைச் சேர்ந்த வீரன் (54), இறந்த ஏழுமலையின் மகன் ஆசன் (6) என்பது தெரிய வந்தது.

லாரி ஓட்டுநரான திருவண்ணாமலையை அடுத்த பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தை (40) திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.