சென்னையில் 65 வயது பாட்டியை கழுத்தை அறுத்து கொலை

சென்னை தி.நகரில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ளது வித்யோதயா மெயின் ரோடு.

இங்கு சாந்தி என்ற 65 வயது மூதாட்டி பழமையான தனி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது தந்தை இறந்து விட்டார். திருமணமாகாதவர் சாந்தி. இவருக்கு தாய்மாமன்கள் சோமசுந்தரம் மற்றும் வேணுகோபால் ஆகியோர் ஆதரவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சாந்தி வீட்டில் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. தலையில் பலமாக அடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சாந்தியின் மாமன் மகன் ரமேஷ் என்பவர் போலீஸில் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சாந்தி வசித்து வந்த வீடு அவரது அப்பாவுக்குச் சொந்தமானது. மிகப் பழமையானது. பல கோடி மதிப்புடையது. இதேபோல வாடகைக்கும் ஒரு வீட்டை விட்டுள்ளார் சாந்தி. அவருக்கு சொத்துக்களும், வீடுகளும் இருந்ததால் இதை அபகரிக்க சிலர் முயன்று வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த நோக்கத்தில் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் வீட்டிலிருந்த சில சொத்து ஆவணங்களும் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. சாந்தி வீட்டில் பணமும், நகைகளும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவை திருடு போயுள்ளதா என்பது குறித்துத் தெரியவில்லை. சென்னையில் தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொலை செய்வது ஒரு தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது.

தி.நகரில் மட்டும் பல பெண்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தீபாவளிக்கு அடுத்த நாள் ஒரு மூதாட்டியைக கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சாந்தி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அவரது அப்பாவின் பென்ஷன் வந்து கொண்டிருந்தது. மன அழுத்தம் காரணமாக அவர் அவ்வளவாக வெளியில் வருவதில்லையாம்.

வீட்டோடு இருந்து வந்துள்ளார். சோமசுந்தரத்தின் மகன்தான் அடிக்கடி வீட்டுக்கு வந்து அத்தையைப் பார்த்துச் செல்வாராம். நடிகர் சங்கம் உள்பல பட முக்கிய இடங்கள் இந்தத் தெருவில் உள்ளன. அப்படி இருக்கும்போது துணிகரமாக நடந்துள்ள இந்தக் கொலை மக்களை அதிர வைத்துள்ளது. வீட்டுக்கு எதிரில் உள்ள நிறுவனத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதிலிருந்து ஏதாவது கிடைக்கிறதா என்று போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.