60 வயது முதியவர் தன் மனைவியை குத்தி கொலை

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற 60 வயது கணவன் கைது செய்யப்பட்டார்.

தெற்கு டெல்லியில் உள்ள ஆனந்த் நிகேதன் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் மொங்கா(60). இவரது மனைவி டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் மஞ்சு. இந்நிலையில் நேற்று மஞ்சு பணிபுரிந்து வரும் தனியார் அலுவலகத்திற்கு, அவரை அழைத்து வர முகேஷ் காரில் சென்றுள்ளார். அப்போது போதையில் இருந்த அவர், காரில் ஏறிய மஞ்சுவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனைக் கண்ட பாதுகாவலர் காரில் இருந்து மஞ்சுவை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் முகேஷ் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக விரைந்து சென்று, காரை தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து தப்பிச் சென்ற முகேஷை, காவல்துறையினர் கைது செய்தனர்.

படுகாயமடைந்த மஞ்சு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முகேஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் மஞ்சுவிற்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருவதால், அவர் மீது சந்தேகமடைந்ததாக கூறினார். இதனால் அவரிடம் இருந்து தொடர்ந்து விலகி வந்ததாகவும், தன்னிடம் அளித்த பணம் குறித்து, மஞ்சு தொடர்ந்து கேட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.