சென்னையைச் சேர்ந்த 4 பேர் பாபநாசம் அணையில் மூழ்கி பலி

பாபநாசத்திற்கு சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த 4 பேர், தலையணையில் மூழ்கி உயிரிழந்தனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சீனிவாசன், நக்கீரன், வசந்தராஜ், சதீஷ்குமார் ஆகிய 4 பேர் கடந்த 8 ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.

அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிய இவர்கள், 9 ஆம் தேதி தலையணையில் குளிக்க சென்றார்கள். அதன்பிறகு அவர்கள் திரும்பவில்லை.

விடுதி ஊழியர்கள் இதுபற்றி சிங்கை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்களில் வசந்தராஜ் உடல் தலையணையில் ஒதுங்கியது. சிங்கை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதனிடையே மற்ற 3 பேர் உடலும் உள்ளே கிடக்கலாம் என்று சந்தேகம் அடைந்த போலீசார் இரவு அவற்றை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இன்று காலையில் 3 பேர் உடலும் மீட்கப்பட்டன.

4 பேரும் தலையணையில் குளிக்க சென்ற போது பாறைக்கு அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து 4 பேரும் தங்கி இருந்த அறையை திறந்து போலீசார் சோதனை போட்டனர். அவர்களது முகவரி மற்றும் தொடர்பு எண்களை வைத்து 4 பேரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்கள்.

சென்னை, புதுவையில் இருந்து 4 பேரின் உறவினர்களும் நெல்லை விரைந்துள்ளனர். 4 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.