சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, தனியார் நிறுவனம் ஒன்று சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் பொருத்தி தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட சரிதா நாயர் என்ற பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.  தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள சரிதா நாயர், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு வாக்கு மூலம் தெரிவித்ததோடு, பாலியல் புகாரும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இந்த விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி பல தகவல்களை தெரிவித்த சரிதா நாயர், தன்னுடன் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அமைச்சர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் உம்மன் சாண்டியும், நேரில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்திருந்தார். இந்த நிலையில், உம்மன் சாண்டியின் முன்னாள் பாதுகாவலர் சலீம்ராஜ், என்பவர் தனது போன் மூலமாக சரிதா நாயரிடம் உம்மன் சாண்டி 418 முறை பேசியிருப்பதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இது குறித்து விசாரணைக் கமிஷனிடம் மேலும் கூறிய அவர், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மே மாதம் 13-ஆம் தேதி வரை 418 முறை சரிதாநாயருடன் எனது செல்போனை பயன்படுத்தி பேசி உள்ளார். சரிதாநாயரும் எனது செல்போனில் தொடர்பு கொண்டே உம்மன்சாண்டியிடம் அடிக்கடி பேசுவார். மேலும் உம்மன்சாண்டியின் உதவியாளர்கள் ஜிக்குமோன், ஜோப்பன், பாலகிருஷ்ணன் ஆகியோருடனும் சரிதாநாயர் அடிக்கடி போனில் பேசுவார். என்னிடம் போலீஸ் ஏ.டி. ஜி.பி. ஹேமச்சந்திரன் பல முறை விசாரணை நடத்தி உள்ளார். ஆனால் அப்போது இதுபற்றி அவர் என்னிடம் எதுவும் கேட்காததால் நான், இந்த போன் பேச்சு பற்றி குறிப்பிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.