ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை: புதுவை லாட்ஜில் பரபரப்பு

புதுத்துச்சேரி லாட்ஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, போரூரைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (65) அவரது மனைவி துளசி (60) மற்றும் மகன் பாலமுருகன் (36) ஆகிய மூன்று பேரும் திங்கள்கிழமை புதுவைக்கு வந்துள்ளனர். புதுவை உருளையன் பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், புதுச்சேரியை சுற்றி பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு அறையை காலி செய்வதாக கூறிய அவர்கள் காலி செய்யவில்லை. இதையடுத்து விடுது ஊழியர்கள் அறைக்கதை தட்டியபோது நெடு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விடுதிக்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 3 பேரும் இறந்து கிடப்பது தெரியவந்தது.

அவர்களுக்கு அருகில் விஷ பாட்டிலும், மது பாட்டிலும் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் எழுதிய கடிதம் போலீஸாருக்கு கிடைத்தது. அதில், தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தாங்கள் இறந்த செய்தியை கடலூரில் உள்ள உறவினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து, கடலூரில் உள்ள உறவினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். உறவினர் வந்த பிறகே 3 பேர் குறித்த முழு விவரம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.