ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை திருப்பத்தூரில் பரபரப்பு

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள காக்கங்கரை என்ற கிராமத்தைச் சேர்ந்த மின் வாரிய ஊழியரான மோகன் (55), அவரது மனைவி ராஜேஸ்வரி (47), மகன் தமிழரசன் (25), மகள் சுகன்யா (23) ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், கல்லால் தலையை நசுக்கியும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் தமிழரசன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

காக்கங்கரை கிராமபுற சாலையோரம் வீடு மட்டும் இரண்டு கடைகளைக் கட்டி மோகன் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இதில் ஒரு கடையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவர் மளிகை கடை வைத்துள்ளார்.

இன்று காலை கடை திறக்க வந்த ஜான்சி, மோகனின் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அவர்களது வீட்டு கதைவை தட்டியுள்ளார். ஆனால், வீடு உள் பக்கமாக பூட்டப்படாமல் இருந்ததால், திறந்து பார்த்தவர்கள், நான்கு பேரும் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்து வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கோபால கிருஷ்ணன், ஸ்ரீதர் மற்றும் கந்திலி போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர்.

மகன் தமிழரசனும் கழுத்தறுக்கப்பட்டு கல்லால் தாக்கப்பட்டு கிடந்தார். உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சொத்து தகராறு உள்ளிட்ட முன்விரோத பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஈடுபட்டு இருக்கலாம். எனவே கூலிப்படை கும்பலை ஏவி மின் ஊழியரின் குடும்பத்தை தீர்த்துக் கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.