மதுரையில் 3 அல்கொய்தா அமைப்பு சேர்ந்தவர்கள் கைது

மதுரையில் அல்கொய்த அடிப்படைவாத அமைப்பு என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வந்த 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைதானவர்களிடம் இருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பும், போலீசாரும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கரீம், அப்பாஸ் அலி, அயூப் ஆகிய மூவரிடமும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் ஹக்கிம் தாவூத் சுலைமான் ஆகியோரை காவல்துறை தேடி வருகின்றனர்.

இந்த அமைப்பினர் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் 22 முக்கிய தலைவர்களை குறிவைத்து திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இவர்கள் 5 நீதிமன்றங்களில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்பு உடையவர்கள் என போலீஸ் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

6 நாட்டு தூதரகங்களுக்கு மிரட்டல் விடுத்த இந்த பயங்கரவாத குழுவுக்கு அல்கொய்தாவுடன் நேரடி தொடர்பு இருந்ததா என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. மதுரையில் பிரதமர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய 22 தலைவர்களை கொல்ல ஒரு அமைப்பு செயல்பட்டு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.