மறைமுக வரி வசூல் 27.5 சதவீதம் அதிகரிப்பு

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால அளவில் நாட்டின் நிகர மறைமுக வரி வசூல் 27.5 சதவீதம் அதிகரித்தது.

மறைமுக வரியின் கீழ் உற்பத்தி வரி, சேவை வரி, சுங்க வரி ஆகியவை உள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத கால அளவில் மறைமுக வரி வசூல் ரூ.3.36 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டு இதே கால அளவு வரி வசூலுடன் ஒப்பிடுகையில் இது 27.5 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதி ஆண்டு மறைமுக வரிக்கான பட்ஜெட் இலக்கில் ஆகஸ்ட் வரையிலான கால அளவில் 43.2 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான கால அளவில், உற்பத்தி வரி வசூல் ரூ.1.53 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் வசூலான உற்பத்தி வரி ரூ.1.03 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது இது 48.8 சதவீதம் அதிகமாகும்.

சேவை வரி ரூ.75,219 கோடியிலிருந்து 23.2 சதவீதம் அதிகரித்து ரூ.92,696 கோடியாகவும், சுங்க வரி வசூல் 5.7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.90,448 கோடியாகவும் இருந்தது.

நேரடி வரி:

நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் முதல் ஐந்து மாத கால அளவில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் நிகர நேரடி வரி வசூல் 15.03 சதவீதம் அதிகரித்து ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டு நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் இது 22.30 சதவீதமாகும்.

கூடுதலாக வரி பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்ட தொகை (வரி ரீபண்டு) 22.18 சதவீதம் அதிகரித்து ரூ.77,080 கோடியாக இருந்தது. நேரடி வரி என்பது நிறுவனங்களின் வருமான வரி, தனி நபர் வருமான வரி ஆகியவற்றை உள்ளடக்கியது.

மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரிகள் முலம் ரூ.8.47 லட்சம் கோடியும், மறைமுக வரிகள் வாயிலாக ரூ.7.79 லட்சம் கோடியும் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.