பட்டப்பகலில் 21 வயது பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்

தில்லியில் ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணைப் பட்டப் பகலில் நடுரோட்டில் வெறித்தனமாக கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வடக்கு தில்லி புராரி பகுதியில் சம்பவத்தன்று காலை சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதையடுத்து, அப்பெண் மயங்கி விழுந்து இறந்தார். சாலையில் நடந்து சென்றவர்கள், வாகன ஓட்டிகள் கண் எதிரே பட்டப்பகலில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்தவர் புராரி பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் சிங் என்பது தெரிய வந்தது. கணினி மையம் நடத்தி வந்த இவரிடம், கருணா (21) என்பவர் சில காலம் கணினி பயிலச் சென்றார்.

இந்நிலையில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்த கருணாவை சுரேந்தர் சிங் ஒருதலையாக காதலித்து வந்தார். அப்பெண் பின்னால் சென்று தனது காதலை ஏற்குமாறும் தொடர்ந்து வற்புறுத்தினார். இதை ஏற்க மறுத்த கருணா, தனது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார்.

பின்னர், கருணாவின் பெற்றோர் சுரேந்தர் சிங் மீது போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஆறு மாதமாக கருணாவை பின் தொடர்வதை சுரேந்தர் சிங் நிறுத்தி இருந்தார். இந்நிலையில், சுரேந்தர் சிங் தனது காதலை ஏற்க மறுத்த கருணாவை 22 தடவைக்கும் மேல் கத்தியால் குத்திக் கொன்றது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.