ஒருதலை காதலால் கேரளாவில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த லட்சுமி என்ற 21 வயது பெண், கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3 ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார்.

இதே கல்லூரியின் முன்னாள் மாணவரான ஆதர்ஷ் என்ற 25 வயது வாலிபர், கல்லூரி அருகே பேன்சி கடை நடத்தி வந்திருக்கிறார்.

அவரது கடைக்கு மாணவி லட்சுமி பொருட்கள் வாங்க வந்த போது அவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆதர்சுக்கு அந்த மாணவி மீது காதல் ஏற்பட்டது. அவர் தனது காதலை அவரிடம் தெரிவித்த போது அதை ஏற்க லட்சுமி மறுத்து விட்டார். அவரிடம் நட்பாக தான் பழகியதாக லட்சுமி கூறினார்.

ஆனாலும் ஆதர்ஷ் தனது காதலை கைவிடவில்லை. லட்சுமியிடம் தன்னை காதலிக்கும் படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் அவரது கடைக்கு செல்வதை லட்சுமி தவிர்த்தார். இது ஆதர்சுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று பகல் கல்லூரி உணவு இடைவேளையின் போது ஆதர்ஷ் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தார். லட்சுமி படிக்கும் வகுப்பறைக்குள் சென்ற அவர் தன்னை காதலிக்கும் படி லட்சுமியிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், அவரை லட்சுமி கண்டித்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேச் செல்லும்படி கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆதர்ஷ், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மாணவி லட்சுமி மீது ஊற்றி தீ வைத்தார். பிறகு அவர் மாணவியை கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் லட்சுமி, ஆதர்ஷ் இருவரின் உடலிலும் தீ பரவியதால் அவர்கள் அலறினார்கள்.

அவர்களை காப்பாற்ற முயன்ற சில மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதற்குள் லட்சுமியும், ஆதர்சும் உடல் கருகி கீழே பிணமாக சாய்ந்தனர். கல்லூரி வகுப்பறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்துச் சென்று லட்சுமி, ஆதர்ஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.